/indian-express-tamil/media/media_files/2025/09/22/aircel-maxis-2-2025-09-22-06-43-09.jpg)
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் காலத்தில் ஏர்செல் நிறுவனத்தைக் கையகப்படுத்த அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், சி.பி.ஐ-யின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏர்செல் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்காக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் காலத்தில் மேக்சிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய (FIPB) அனுமதியில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக, மலேசிய தொலைத்தொடர்பு நிறுவனமான மேக்சிஸ் மற்றும் அதன் முன்னாள் இயக்குநர் அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் ஆகியோருக்கு சி.பி.ஐ கேட்டுக்கொண்டதன் பேரில் சிறப்பு நீதிமன்றம் புதிய சம்மன் அனுப்பியுள்ளது.
வழக்கின் பின்னணி
2006-ம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தில் 100% துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேஷன் சர்வீசஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட், தனது வெளிநாட்டு முதலீட்டை 26% இலிருந்து 73.99% ஆக ரூ.3,560 கோடிக்கு (800 மில்லியன் டாலர்) அதிகரிக்க அனுமதி கோரியது.
அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ரூ.600 கோடி வரையிலான முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் மட்டுமே இருந்தது. ஆனால், இந்த முதலீடு ரூ.3,560 கோடி என்ற உச்ச வரம்பை மீறியிருந்ததால், இது பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் (CCEA) ஒப்புதலுக்குச் சென்றிருக்க வேண்டும்.
இருப்பினும், ப.சிதம்பரம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், முதலீட்டின் மதிப்பைக் குறைந்த ரூ.180 கோடியாகக் காட்டி ஒப்புதல் அளித்ததாக சிபிஐ குற்றம் சாட்டுகிறது. இதற்குக் கைமாறாக, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துடன் தொடர்புடைய இரண்டு நிறுவனங்களுக்கு செஸ் மேலாண்மை தனியார் நிறுவனம் (Chess Management Services Private Limited மற்றும் அட்வாண்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் தனியார் நிறுவனம் (Advantage Strategic Consulting Private Limited) மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களிடமிருந்து ரூ.26 லட்சம் மற்றும் ரூ.87 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் சி.பி.ஐ குற்றம் சாட்டியுள்ளது.
நிறுவனங்களுக்கு புதிய சம்மன்
இந்த வழக்கு தொடர்பாக, மலேசியாவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான அஸ்ட்ரோ ஆல் ஆசியா நெட்வொர்க் என்ற நிறுவனத்திற்கும் சம்மன் அனுப்ப சி.பி.ஐ கோரிக்கை விடுத்தது, அதற்கும் சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த சம்மன்களை மலேசியாவில் வழங்குவதற்காக, நீதிமன்றத்திடம் சி.பி.ஐ மூன்று மாத கால அவகாசம் கோரியுள்ளது.
முந்தைய நடவடிக்கைகள்
2014-ம் ஆண்டு அப்போதைய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் சிலர் மீது சி.பி.ஐ முதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதன் பிறகு, மலேசியாவில் உள்ள எதிரிகளுக்கும் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், இந்தியத் தூதரகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முயற்சிகள் இருந்தபோதிலும், சம்மன் வழங்கப்படவில்லை.
2017-ம் ஆண்டு, மாறன் மற்றும் சி.பி.ஐ குற்றப்பத்திரிகையில் பெயரிடப்பட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த விடுவிப்பை எதிர்த்து சி.பி.ஐ டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
2018-ம் ஆண்டு, ப.சிதம்பரம் மற்றும் சிலர் மீது சி.பி.ஐ மற்றொரு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அது இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாகப் ப.சிதம்பரம், “சி.பி.ஐ ஏற்கனவே ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இப்போது அமலாக்கத் துறை புகார் அளித்துள்ளது. நீதிமன்றம் சம்மன் அனுப்பினால், வழக்குகளைச் சந்திப்பேன். வேறு எந்த பொதுக் கருத்தையும் நான் தெரிவிக்க மாட்டேன்” என்று எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும், எப்.ஐ.பி.பி-தான் ஒரு முன்மொழிவு நிதியமைச்சரின் வரம்பிற்குள் வருகிறதா என்பதை முடிவு செய்கிறது என்றும், எப்.ஐ.பி.பி இந்த முன்மொழிவை தனக்குச் சமர்ப்பித்ததாகவும், அதைத் தான் மற்ற 20 முன்மொழிவுகளுடன் சேர்த்து ஒப்புதல் அளித்ததாகவும் அவர் 2018-ஆம் ஆண்டில் விளக்கமளித்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.