Airlines offers : இன்றைய அவசர உலகில் உள்ளூர் வெளியூர்களுக்கு ரயில், பேருந்தை நாடுபவர்களை விட விமானத்தில் பறப்பவர்களே அதிகம். அப்படி அடிக்கடி விமானத்தில் செல்பவர்களுக்கு இந்த தகவல் மிகவும் அவசியம் தெரிந்துக் கொள்ளுங்கள்.
விமானக் கட்டணத்தை பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்பவர்களுக்கு இனி அபராதக் கட்டணம் கிடையாது. ஆனால், பதிவு செய்யப்பட்ட தினத்தில் இருந்து 7 நாள்களுக்கு உட்பட்டதாக இருக்கும் பயண டிக்கெட்டுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.
விமானப் பயண டிக்கெட் மற்றும் இழப்பீடு கோருவது உள்ளிட்டவை தொடர்பான புதிய விதிமுறைகளை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, பதிவு செய்ததில் இருந்து 7 நாள்களுக்குள் பயணம் தொடங்கும் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், அடிப்படை டிக்கெட் கட்டணம் மற்றும் எரிபொருள் கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையில் அபராதம் விதிக்கலாம். அதுவே 7 நாள்களைத் தாண்டியதாக இருந்தால் அபராதம் கிடையாது.
டிக்கெட் பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள், பெயரில் உள்ள பிழைகளை எந்தவித கட்டணமும் இல்லாமல் திருத்தம் செய்துகொள்ளலாம். அதேபோல, விமானங்கள் நிறுவனங்கள் தவறவிடும் பயணிகளின் உடமைகளுக்கு இழப்பீடு பெறுவதற்கான தொகையானது, கிலோ ஒன்றுக்கு ரூ.350ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு அதிகபட்ச இழப்பீடு ரூ.3,000 என இருந்தது. அந்தத் தொகை தற்போது ரூ.20,000 என உயர்த்தப்பட்டுள்ளது.