பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், கடந்த 7 மாதங்களில் திரைப்படங்களில் எதுவும் நடிக்காமலே ரூ.110 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். மும்பையில் உள்ள தனது சொத்துகளை விற்றதன் மூலமே அவர் இந்த வருமானத்தைப் பெற்றுள்ளதாக ஈடி நவ் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்ஷய்குமார் மும்பையின் பிரபலமான பகுதிகளில் உள்ள 8 சொத்துகளை விற்று இந்தத்தொகையை ஈட்டியுள்ளார். இதில் வொர்லி, போரிவலி, லோயர் பரேல் போன்ற பகுதிகளில் உள்ள சொத்துகள் அடங்கும். வொர்லி பகுதியில் உள்ள 'ஓபராய் த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட்' என்ற ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 6,830 சதுர அடி கொண்ட ஒரு சொத்தை விற்றதன் மூலம் அக்ஷய் குமார் ரூ.80 கோடி சம்பாதித்துள்ளார். இந்த விற்பனை மட்டுமே அவரது மொத்த வருமானத்தில் 70-75% ஆகும்.
போரிவலியின் 'ஓபராய் ஸ்கை சிட்டி' திட்டத்தில் உள்ள 3 படுக்கையறை மற்றும் ஸ்டுடியோ வகை குடியிருப்புகளை விற்றதன் மூலம் ரூ.4.25 கோடி கிடைத்துள்ளது. மேலும், மும்பையின் மற்றொரு பகுதியில் உள்ள 2 அடுக்குமாடிக் குடியிருப்புகளை விற்று ரூ.6.60 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். 2020-ஆம் ஆண்டு ரூ.4.85 கோடிக்கு வாங்கிய லோயர் பரேலில் உள்ள 'லோதா ஒன் பிளேஸ்' என்ற வணிக அலுவலக இடத்தைச் சமீபத்தில் ரூ.8 கோடிக்கு விற்று, 65% லாபம் பார்த்துள்ளார். ரியல் எஸ்டேட் விற்பனை மூலம் மட்டுமே அக்ஷய் குமார் இந்த 7 மாதத்தில் 110 கோடி ரூபாயை வருமானமாக பெற்று இருக்கிறார் .
அக்ஷய் குமாரின் ரியல் எஸ்டேட் வருமானம் அதிகரித்துள்ள நிலையில், அவரது சமீபத்திய திரைப்படங்களின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அண்மையில்தான் அக்ஷய் நடிப்பில் ஹவுஸ்புல்-5 திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக மாறியது. இந்த திரைப்படம் 116 கோடி வசூல் செய்தது. விரைவில் பூத் பங்களா ,வெல்கம் டூ தி ஜங்கிள், உள்ளிட்ட இவரது படங்கள் வெளியாக இருக்கின்றன. ரூ.2,500 கோடி சொத்து மதிப்பு கொண்ட பாலிவுட் நடிகராக அக்சய் குமார் இருக்கிறார்.