- 6 ஆயிரம் பேர் பணியாற்றும் வகையில் 8.3 லட்சம் சதுர அடி பரப்பளவில், தமிழ்நாட்டில் கட்டப்பட்ட 4 ஆவது அமேசான் கட்டிடம் இதுவாகும்.
- புதிய அலுவலகம், ஊழியர்களிடையே தனி திறமையை பிரதிபலிக்குவும், புதுமைகளை வளர்க்கவும் நவீன மற்றும் பெரிய இடங்களுடன் கூடிய சுறுசுறுப்பான சூழலை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- சென்னை மற்றும் கோயம்புத்தூரில் 14,000 ஊழியர்களைக் கொண்ட அமேசான், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
அமேசான் இந்தியாவின் புதிய அலுவலகம் சென்னையில் நேற்று(மார்ச்.29) திறக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் நீரஜ் மிட்டல் ஆகியோர் முன்னிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின், அலுவலகத்தை திறந்து வைத்தார். பல உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
சென்னை பெருங்குடி பழைய மகாபலிபுரம் சாலையில் உலக வர்த்தக மைய வளாகத்தில் இடம்பெற்றுள்ள 18 மாடிகளை கொண்ட இந்த புதிய அலுவலம், தமிழ்நாட்டில் அமேசான் நிறுவும் 4 ஆவது கட்டிடம் ஆகும்.
2005ஆம் ஆண்டு சென்னையில் சுமார் 50 நபர்களுடன் செயல்பட தொடங்கிய அமேசான், இன்று மாநிலம் முழுவதும் 14 ஆயிரம் ஊழியர்களை கொண்டுள்ளது. அமேசான் மக்கள் மற்றும் வணிக உத்திகளின் குறிப்பிடத்தக்க இடமாக உருவெடுத்துள்ளது .
அமேசான் நிறுவனத்திற்கு சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இரண்டு அலுவலகங்களும், கோவை சரவணம்பட்டியில் ஒரு அலுவலகமும் உள்ளது. அமேசான் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கும், அவர்களது அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் மாநிலத்தில் பணியாளர் தளத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் அமேசான் குறிப்பிடத்தக்க முதலீடுகளை fulfillment உள்கட்டமைப்பில் செய்துள்ளது. நிறுவனத்திற்கு சொந்தமான 4 fulfillment மையங்களும், 3 Sort மையங்களும், மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
2021 இல், அமேசான் இந்தியா தனது முதல் சாதனங்கள் உற்பத்தி மையத்தை தமிழ்நாட்டில் நிறுவியது. தற்போது, அந்த உற்பத்தி மையத்தில் ஆயிரக்கணக்கான Fire TV Stick சாதனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் அமேசானின் உள்கட்டமைப்புக்கான இந்த முதலீடுகள் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்க உதவியுள்ளன.

அமேசான் புதிய அலுவலகம் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, ” தமிழகத்தில் உள்கட்டமைப்பு வளர்ச்சிகள் நமது முதலீட்டு நட்புக் கொள்கைகள் மட்டுமின்றி மாநிலத்தில் உள்ள திறமையாளர்களுக்கு புதிய வேலைகளை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பின் விளைவாகும். அமேசானின் புதிய அலுவலகம் சென்னையில் தொடங்கப்பட்டிருப்பது மாநிலப் பொருளாதாரத்தில் பல மடங்கு விளைவை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
அமேசானின் இந்த வளர்ச்சியை வரவேற்கிறோம். அவர்களது புதிய அலுவலக திறப்புக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழகத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவற்றுக்கான அமேசான் நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை எதிர்நோக்குகிறோம்” என்றார்.
அமேசான் குளோபல் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் மேத்யூஸ் கூறுகையில், ” புதிய அலுவலகத்தை சென்னையில் தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். சில சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்த தனித்துவமான திறமைகள் அடங்கிய தமிழ்நாடு மாநிலம், இந்தியாவில் அமேசானின் முக்கியமான திறமை மையமாக உருவெடுத்துள்ளது.
புதிய அலுவலகம், மாநிலத்திற்கான எங்களின் வளர்ச்சி மற்றும் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கும் அவர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், இங்கு எங்கள் பணியாளர் தளத்தை விரிவுபடுத்தி முதலீடு செய்வோம்” என்றார்.
சென்னையில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகம், ஊழியர்கள் குழுவில் தனித்திறமையை பிரதிபலிக்கவும், புதுமைகளை அதிகரிக்கும் நோக்கிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமேசானின் உலகளாவிய தரங்களுக்கு இணையாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதில், வோர்க் ஸ்டேஷன், டூயல் கேபின், பிரைவட் கேபின், மீட்டிங் ரூம், போர்டு ரூம், போன் பூத், ஹடில் ரூம், மெயில் ரூம், ஓய்வு அறை, வழிபாட்டு மற்றும் தியான அறை, தாயார் அறை மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் புட் கோர்ட்டும் உள்ளது.
ஒவ்வொருன்றும், ஊழியர்களின் நல்வாழ்வு மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது. அமேசானின் சுறுசுறுப்பான பணிச்சூழலில் இருந்து தங்களது தேவைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு கூட்டுப் பணியிடங்களைத் தேர்ந்தெடுக்கவும், குழுக்கள் முழுவதும் திறம்பட தொடர்பு கொள்ளவும் உதவியாக அமைந்திடும். அமேசான் தனது அலுவலகங்களில் பணியாளர்கள், கூட்டாளிகள், பாட்னர்களுக்கு சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது. பாதுகாப்பான பணிச்சூழலை வழங்க அரசாங்க வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறது.
இந்த அலுவலகக் கட்டிடமானது அதிநவீன உள்கட்டமைப்பு வடிவமைப்பு மற்றும் வசதிகளைக் கொண்டுள்ளது. இவை, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத் தரங்களால் கட்டப்பட்ட கட்டிடத்தையும் விட கணிசமாக குறைந்த செலவில் செயல்படும். இந்த தரநிலைகள் வருடாந்திர ஆற்றல் நுகர்வில் 23% குறைக்கிறது. அதேபோல், குடிநீர் நுகர்வில் 76% குறையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெருந்தொற்று நிலைமை சீரானதும்,அனைத்து ஊழியர்களுக்கு அலுவலகம் திரும்பும் போது, புதிய அலுவலகம் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு பாதுகாப்பான பணியிடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள அமேசான், அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை முதன்மையான முன்னுரிமையாக வைத்திருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil