/tamil-ie/media/media_files/uploads/2018/10/d425.jpg)
50,000 வேலைவாய்ப்புகள் அளிக்கும் அமேசான்
அமேசான்: ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், அக்டோபர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை 'கிரேட் இண்டியன் பெஸ்டிவல் சேல்' என்கிற விற்பனையை முன்னெடுக்கிறது. இதற்காக சுமார் 50,000 புதிய வேலைவாய்ப்புகளை அந்நிறுவனம் உருவாக்குவதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், 'இந்தியாவில் பண்டிகை விற்பனை தொடங்குவதால் அதற்கேற்ப 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பணி அமர்த்தல்கள் இருக்கும். அமேசான் நிறுவனத்தின் அனைத்து பணிகளுக்கும் புதிய வேலையாட்கள் பணியமர்த்தப்பட இருக்கிறர்கள்' என்று கூறியுள்ளது.
அமேசான் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு துணைத் தலைவர் அகில் சக்ஸேனா கூறுகையில், "வாடிக்கையாளர்களுக்கு இலகுவான அனுபவத்தை வழங்க வேண்டும். பொருட்களை விரைவாக அனுப்புவதற்காக பண்டிகை காலத்தில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க முயற்சிகளை எடுத்துள்ளோம். கடந்த பண்டிகை விற்பனையுடன் ஒப்பிடுகையில் வாடிக்கையாளர் சேவை மையங்களையும் மேம்படுத்தியுள்ளோம். இதற்கு ஏற்ப பண்டிகை காலத்தில் 50,000 புதிய பணியாளர்கள் எங்களுக்கு பணியாற்ற உள்ளனர்.
அமேசான் நிறுவனம் இந்த ஆண்டில் தங்களது கட்டமைப்பு மற்றும், டெலிவரி நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்காக கணிசமான முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.
இந்த விற்பனைக்காக ஆர்டர்களை பெறுவது, வகைப்படுத்துவது, டெலிவரி செய்வது மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்றவற்றுக்கான மையங்களையும் உருவாக்கியுள்ளோம். குறிப்பாக மும்பை, டெல்லி, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, அகமதாபாத், புணே உள்பட பல நகரங்களில் அமைத்துள்ளோம்.
16 நகரங்களில் அமைந்துள்ள 20 வாடிக்கையாளர் சேவை நிலையங்களுக்கும் புதியவர்கள் நியமிக்கப்படுவர். கன்னடம், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை கிடைக்கும்" என்று சக்ஸேனா கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.