ஆர். சந்திரன்
அமெரிக்காவில் இருந்து வரும் கோழி இறைச்சியை, இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டும் என, நடந்து வந்த நீண்ட காலப் போராட்டத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது. 'பாதுகாப்பான உணவுப் பொருள்தான்' என, சுகாதாரச் சான்றிதழ் வழங்குவதில் இந்திய அரசு அண்மையில் மேற்கொண்ட விதி மாற்றங்களால் அமெரிக்க கோழி இறைச்சி இறக்குமதி இனி சாத்தியமாகிறது.
அமெரிக்க பண்ணைகளில் வளரும் கோழிகளுக்கு தரப்படும் உணவு மற்றும் பிற செலவுகள் வேறு. அதோடு, விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு அமெரிக்காவில் தரப்படும் மான்யம் உள்ளிட்டவையால், அங்கே கோழிப் பண்ணை நடத்துவது எளிதாகிறது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியானாலும் அவை விலை குறைவாகவே இருக்கும். இதனால், இந்திய கோழி இறைச்சி சந்தையில், சுமார் 40 சதவீதத்தை அமெரிக்க கோழிகள் பிடித்துவிடும் என இத்துறையினர் கணக்கிட்டுள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 35 லட்சம் டன் கோழி இறைச்சி அமெரிக்காவில் இருந்து, இந்தியா வர வாய்ப்புள்ளதாகவும் இத்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
அண்மைக்காலம் வரை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குள் கோழி இறக்குமதி செய்வதை சட்ட ரீதியாக தடை செய்யாவிட்டாலும், சில சிறப்பு விதிமுறைகளைக் காட்டி இறக்குமதியை கடினமாக்கியிருந்தனர். உதாரணமாக, பறவைக் காய்ச்சல் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு, இந்திய அரசு, அமலாக்கிய கடுமையான விதிகளால் அமெரிக்க இறக்குமதி சாத்தியமாகவில்லை. ஆனால், தனது பன்முக வலிமையால், அந்த விதிகளில் தற்போது மாற்றங்களை கொண்டு வந்து, அமெரிக்க இறைச்சி ஏற்றுமதியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது நாமக்கல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் கோழி வளர்ப்பு தொழிலை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உள்ளூர் காரணங்களால், அடிக்கடி நெருக்கடியைச் சந்தித்து வந்த கோழி பண்ணையாளர்கள், இப்போது எழும் புதிய சவாலை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.
இந்த நடப்பு குறித்து விவரம் அறிந்தவர்களின் கருத்துப்படி, தற்போதைய நிலைக்கு ஒரே தீர்வுதான் உள்ளது. அது, நீண்ட நேரத்துக்கு ஆழ்நிலை உறைகுளிருட்டப்பட்ட இறைச்சியை உட்கொள்வது, இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வாழும் மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்குமா என்ற கேள்வியை எழுப்பலாம். கூடவே, மனித உடல் ஆரோக்கியம் தொடர்பான OIE பரிந்துரைகளை முன்வைத்து நடவடிக்கை எடுப்பதன் மூலமும் இந்திய கோழி பண்ணையாளர்களை காப்பாற்ற முடியும். ஆனால், இதற்கு இந்திய அரசின் வர்த்தகத் துறை அமைச்சகமும், அதிகாரிகளும் எந்த அளவு தீவிரத்துடன் களமிறங்குவார்கள் என்பதே கேள்வி!
அரசியல் ரீதியான காரணங்களால், பசு வளர்ப்பவர்கள் பின்னால் நின்ற மோடி அரசு, வர்த்தக ரீதியான காரணங்களால், கோழி வளர்ப்பவர்கள் பின்னால் நிற்குமா... அல்லது, அவர்களை கைவிடுமா? காத்திருப்போம், விடை அறிய!