பெரும் பணக்காரர்களில் ஒருவரும், இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜியோ நிறுவனங்களின் தலைவருமான முகேஷ் அம்பானி, தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் 11-வது இடத்தில் இருக்கிறார். இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 10.25 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இத்தகைய பிரம்மாண்டமான வணிகக் குழுமத்தில், சமீபத்தில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியானது.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நியமனம், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
இந்நிலையில், ஆனந்த் அம்பானியின் இந்த புதிய பதவிக்கான ஊதியம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. அவருக்கு ஆண்டுக்கு ரூ. 20 கோடி சம்பளம் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி, அவரது செயல்பாடுகள் மற்றும் நிறுவனத்தின் வருமானத்திற்கு ஏற்ப கமிஷன் தொகையும் கூடுதலாக வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் குழுமத்தில் இளம் தலைமுறைக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை முகேஷ் அம்பானி வழங்கி வருவதாக தொழில்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனந்த் அம்பானியின் இந்த பிரம்மாண்டமான சம்பளம், இந்தியாவின் பெரும் நிறுவனங்களில் வழங்கப்படும் உயர்நிலை நிர்வாகிகளின் ஊதியப் பட்டியலில் ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நியமனம் மற்றும் ஊதியம், ரிலையன்ஸ் குழுமத்தின் அடுத்த தலைமுறை தலைமைத்துவத்தின் மீது அம்பானி குடும்பம் வைத்திருக்கும் நம்பிக்கையையும், அதற்கான முதலீட்டையும் பிரதிபலிக்கிறது என்று பொருளாதார வல்லுரர்கள் கூறுகின்றனர்.