/indian-express-tamil/media/media_files/2025/08/02/tcs-anand-srinivas-2025-08-02-17-53-33.jpg)
12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டி.சி.எஸ் எடுத்த முடிவு, தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் IT துறையில் பணிநீக்கங்கள் ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல, இது ஒரு பெரிய பொருளாதார சங்கிலித் தொடர் எதிர்வினையின் ஒரு பகுதி என்றும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். ஆனந்த் சீனிவாசன் ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் நிதி ஆலோசகர். இவர் பொருளாதாரம், முதலீடு, பங்குச்சந்தை மற்றும் தனிநபர் நிதி மேலாண்மை குறித்து மக்களுக்கு எளிமையாக விளக்கி வருகிறார். இந்நிலையில் டிசிஎஸ் பணிநீக்கம் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அவர் விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் மக்கள் பேச்சு யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
ரியல் எஸ்டேட் மற்றும் வங்கிகள்: டி.சி.எஸ் -ன் பணிநீக்க அறிவிப்பால், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள் ஒரே நாளில் 4% முதல் 6% வரை சரிந்தன. ஐடி ஊழியர்களை நம்பி இருக்கும் வீட்டுக்கடன்கள், தனிநபர் கடன்கள் போன்ற வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும்போது, வங்கிகள் நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். இதனால், புதிய கடன்கள் வழங்குவது குறையலாம் அல்லது வட்டி விகிதங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.
ஐடி துறையின் சுற்றுச்சூழல் அமைப்பு: இந்தியாவின் வளர்ச்சி இயந்திரமாக கருதப்படும் ஐடி துறை, நேரடியாகவும் மறைமுகமாகவும் பல துறைகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. டி.சி.எஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் பணிநீக்கங்கள், ஐடி துறையைச் சார்ந்துள்ள பொறியியல் கல்லூரிகள், போக்குவரத்து சேவைகள், உணவகங்கள் மற்றும் சிறு வணிகங்கள் என ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பையும் கடுமையாகப் பாதிக்கும்.
வேலைவாய்ப்பு மற்றும் சம்பளம்: நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களையே (40-55 வயது) டி.சி.எஸ் பணிநீக்கம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை எனவும் அறிவித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் தயக்கம் காட்டலாம்.
பணவீக்கம்: ஐடி துறையின் ஏற்றுமதி வருவாய் குறையும்போது, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரியும். இதனால் பால், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி செலவு அதிகரித்து, நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும். இது பொதுமக்களின் வாங்கும் திறனைக் குறைக்கும். மேலும் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என்றார்.
இந்தமாதிரியான கடினமான பொருளாதார சூழலை எதிர்கொள்ள, தங்கத்தை அவசரகால நிதியாக சேமித்து வைப்பது பயனளிக்கும் என ஆனந்த் சீனிவாசன் கூறுகிறார். இந்த சவாலான காலகட்டம் அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு நீடிக்கலாம் என்றும் அவர் கணித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.