ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவராக அனில் அம்பானி இருந்து வந்தார். தவிர, அந்நிறுவனத்தின் இயக்குனர்களாக சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி காக்கர் மற்றும் சுரேஷ் ரங்காசார் ஆகியோர் இருந்து வருகின்றனர்.
இந்த நிறுவனத்தில், நடப்பு நிதியாண்டிற்கான முதல் காலாண்டில் ரூ.366 கோடி இழப்பு ஏற்பட்டு இருந்தது. நடப்பு நிதியாண்டிற்கான 2வது காலாண்டில் ரூ.30 ஆயிரத்து 158 கோடியாக இழப்பு உயர்ந்துள்ளது. இதுபற்றிய அறிக்கை வெளியான நிலையில், இயக்குனர் பதவியில் இருந்து விலகும் முடிவை அனில் அம்பானி உள்ளிட்ட 5 பேரும் எடுத்து உள்ளனர்.
கடந்த அக்டோபரில் இந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் இயக்குனர் பொறுப்பில் இருந்து வி. மணிகண்டன் விலகியது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் குழும நிறுவனரான திருபாய் அம்பானியின் மறைவுக்குப் பிறகு, முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் இணைந்து நிறுவனத்தைக் கவனித்து வந்தனர். 2005-ம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமத்தின் சொத்துகள் பிரிக்கப்பட்டபின், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிறுவனமான ஆர்.ஐ.எல் மற்றும் ஐ.பி.சி.எல் ஆகியவற்றை முகேஷ் அம்பானியும், ரிலையன்ஸ் இன்ஃபோ.காம், ரிலையன்ஸ் கேபிடல் மற்றும் ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனங்களை அனில் அம்பானியும் பிரித்து எடுத்துக்கொண்டனர்.
அனில் அம்பானி, 2006-ம் ஆண்டில் 14.8 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தார். முகேஷ் அம்பானியைவிட அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 550 கோடி ரூபாய் அதிகமாக இருந்தது. 2008-ம் ஆண்டில் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 42 பில்லியன் டாலர்களாக உயர்ந்ததோடு, உலகின் ஆறாவது பணக்காரராகவும் திகழ்ந்தார்.
உச்சத்திலிருந்த அனில் அம்பானிக்கு அதற்குப் பிறகு இறங்குமுகம் தான். சரியான திட்டமிடல், தொலைநோக்குப்பார்வை இல்லாததால் அனில் அம்பானியின் தொழில் நிறுவனங்கள் இழப்பைச் சந்திக்கத் தொடங்கின. புதிய தொழில் முயற்சிகளும் பின்னடைவைச் சந்தித்தன. அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பெருநஷ்டத்தைச் சந்தித்து சொத்துக்களை விற்கும் நிலைக்கு வந்தது. அதற்காக அவரது சகோதரர் முகேஷ் அம்பானியின் உதவியை நாடும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இன்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்தே அனில் அம்பானி விலகிவிட்டார்.