பிரான்ஸ் நாட்டில் அனில் அம்பானி பதிவு செய்திருந்த நிறுவனத்திற்கு சுமார் 1125 கோடி ரூபாய் அளவுள்ள வரியை தள்ளுபடி செய்வதாக ரஃபேல் ஒப்பந்தம் முடிந்த 6 மாதத்தில் அந்நாட்டு அரசு அறிவித்ததாக பிரான்ஸ் ஊடகமான லீ மோன்டே செய்தி வெளியிட்டுள்ளது.
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துடன் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க பிரதமர் மோடி ஒப்பந்தம் செய்த சில மாதங்களுக்குபின், பிரான்ஸில் செயல்பட்டுவந்த அனில் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு ரூ.1,124 கோடி(143.7 கோடி யூரோ) வரித்தள்ளுபடி செய்துள்ளது பிரான்ஸ் அரசு. இதனை, பிரபல பிரான்ஸ் ஊடகமான லீ மோன்டே செய்தியாக வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலில், “ரிலையன்ஸ் அட்லான்டில் பிளாக் பிரான்ஸ் எனும் பெயரில் அனில் அம்பானி பிரான்ஸில் தொலைத் தொடர்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த 2007 முதல் 2012-ம் ஆண்டு வரை செலுத்த வேண்டிய வரி குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் விசாரனை நடத்தியதில் 151 மில்லியன் யூரோ வரி செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பிரான்ஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில், அந்த நிறுவனம், முதல் கட்டமாக 7.3 மில்லியன் யூரோ செலுத்த சம்மதித்து. 2008-2014 காலக் கட்டத்தில் இருந்த தொகை பெற சம்மதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் செய்தார். அங்கு பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து பறக்கும் நிலையில், 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்தார். பிரதமர் மோடியின் பிரான்ஸ் வருகை, ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்த ஆகியவை நடந்த 6 மாதங்களுக்குப் பின், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் வரித்தள்ளுபடியை பிரான்ஸ் அரசு வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
அதாவது, ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.1182 கோடி வரி செலுத்த வேண்டிய நிலையில், வெறும் ரூ.57 கோடி(73லட்சம் யூரோ) மட்டும் செலுத்தக் கூறிவிட்டு, ரூ.1,124 கோடியை பிரான்ஸ் அரசு தள்ளுபடி செய்துள்ளது என்று லீ மாண்டே நாளேடு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 பிப்ரவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே பிரான்ஸ் மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே 36 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பாக பேச்சு நடந்த 6 மாதங்களில்தான், அனில் அம்பானி நிறுவனத்துக்கு வரித்தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 787 கோடி யூரோ(ரூ.61,612 கோடி) மதிப்பிலான ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் இந்தியா, பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது.
அந்த வகையில் டசால்ட் நிறுவனம், ரஃபேல் போர் விமானம் உதிரி பாகங்கள் தயாரிப்பை இந்தியாவில் உள்ள அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தனது கூட்டாளி நிறுவனமாகத் தேர்வு செய்தது. ஆனால், பாதுகாப்பு துறையின் விமானத் தயாரிப்பு, பராமரிப்பு துறையில் எந்தவிதமான முன் அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துடன் டசால்ட் நிறுவனம் கூட்டு வைத்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
கடந்த ஆண்டு பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்ஸ்வா ஹோலண்டே பிரான்ஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், ” இந்திய அரசு எங்களுக்கு ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தைத் தவிர வேறு எந்தநிறுவனத்தையும் தேர்வு செய்யக்கோரி வாய்ப்பு தரவில்லை” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரான்ஸின் லீ மோன்டே நாளேடு வெளியிட்டுள்ள செய்திக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ரிலையன்ஸ் நிறுவனம் வரித்தள்ளுபடி பெற்றதாக கூறப்படும் செய்திகள் முழுமையாக சட்டவிரோதமானவை. வரிசெலுத்த வேண்டியது தொடர்பாக நிலுவையில் இருந்த தொகை சட்டப்பூர்வமாக செலுத்தி முடிக்கப்பட்டது. கடந்த 2008-12ம் ஆண்டு வரை பிரான்ஸில் செயல்பட்ட எங்களின் பிளாக் பிரான்ஸ் நிறுவனத்துக்கு செயல்பாட்டு ரீதியில் ரூ.20 கோடி(27லட்சம் யூரோ) இழப்பு ஏற்பட்டது. ஆனால், பிரான்ஸ் அதிகாரிகள் எங்களிடம் ரூ.1100 கோடி வரி கோரினார்கள். ஆனால், பிரான்ஸ் வரி செலுத்தும் சட்டத்தின்படி, சுமூகப் பேச்சுவார்த்தை மூலம், ரூ. 56 கோடி செலுத்தினோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.