scorecardresearch

ஈஷா வழிகாட்டுதலால் ரூ.17.7 கோடி வருவாய்.. அசத்திய கோவை விவசாயிகள்!

வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் மொத்தம் 5,859 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

Annual Agricultural General Meeting was held at Isha Centre Coimbatore
கோவை ஈஷா மையத்தில் ஆண்டு விவசாய பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஈஷாவின் வழிகாட்டுதலின் கீழ் கோவை வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சத்குருவின் ஆலோசனையின் படி, கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
1063 விவசாய உறுப்பினர்களை கொண்டுள்ள இந்நிறுவனத்தில் 404 பேர் பெண் விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில் அந்நிறுவனம் 2021-2022-ம் நிதியாண்டில் ரூ.17.7 கோடி மொத்த வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

இது கடந்த நிதியாண்டை விட ரூ.3.7 கோடி அதிகமாகும். தொடர்ந்து லாபகரமாக இயங்கி வரும் இந்நிறுவனத்தின் ஆண்டு பொது கூட்டம் கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய விவசாயிகள் ”வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் மொத்தம் 5,859 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் தேங்காய், தேங்காய் மட்டை, காய்கறிகள், தேங்காய் எண்ணெய், உர கடை என பல்வேறு வழிகளின் வருமானம் ஈட்டி வருகிறது.
கடந்தாண்டு இதில் அதிகப்பட்சமாக, தேங்காய் விற்பனையின் மூலம் ரூ.14.92 கோடியும், உர கடையின் மூலம் ரூ.1.26 கோடி கோடியும் மொத்த வருவாய் ஈட்டியுள்ளது.

2022 ம் ஆண்டில் 5621 டன் தேங்காய், 7066 டன் தேங்காய் மட்டை, 252 டன் காய்கறிகள், 2.7 டன் தேங்காய் எண்ணெய் ஆகியவை இந்நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் சிறிது சிறிதாக வளர்ந்து 18 கோடி வர்த்தகம் செய்யும் அளவு உயர்ந்துள்ளது.

நிறுவனம் ஆரம்பித்ததில் இருந்து 67 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இந்நிறுவனம் இப்பகுதி விவசாயிகளுக்கு பலனளித்துள்ளது. வருவாயை அனைத்து விவசாயிகளுக்கும் பங்கீடு செய்து தந்து சிறந்த உதாரணமாக உள்ளது.

விவசாயிகளுக்கு விலை கட்டுபடியான விலை கிடைக்காமல் இருப்பது கவலையளிக்கும் விஷயம். அதனை மாற்றி நிரந்தர விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கிராம் காய்க்கும் விவசாயிக்கு காசு வருகிறது. இந்நிறுவனம் செய்த விலை நிர்ணயம் காரணமாக அனைத்து விவசாயிகளுக்கும் அதே விலை கிடைத்துள்ளது.

முன்மாதிரி எப்.பி.ஓ.வாக செயல்பட்டு வருகிறது எனத் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, இந்நிறுவனத்தின் தலைவரும், தொண்டாமுத்தூர் விவசாயியுமான குமார் கூறுகையில், “ஈஷாவின் ஆதரவோடும், விவசாய உறுப்பினர்களின் பங்களிப்போடும் நாம் கூடிய விரைவில் ரூ.50 கோடி ஆண்டு மொத்த வருவாய் என்ற இலக்கை அடைய திட்டமிட்டு வருகிறோம்.

நம்முடைய விவசாயிகளின் காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்யவும், தேங்காய் மற்றும் காய்கறிகளை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கும் முயற்சிகள் எடுத்து வருகிறோம்.
நாம் தொடர்ந்து நல்ல படியாக விவசாயம் செய்ய வேண்டுமானால், மண் வளம் மிகவும் அவசியம். எனவே, சத்குரு ஆரம்பித்துள்ள மண் காப்போம் இயக்கத்தின் பரிந்துரைகளின் படி மாதிரி பண்ணைகளை நம்முடைய கிராமங்களில் உருவாக்க வேண்டும்.

மண் பரிசோதனை செய்வதை எளிமையாக்கும் வகையில், நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை உருவாக்கவும் நம்முடைய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம் தன்னுடைய சிறப்பான செயல்பாட்டால் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.

குறிப்பாக, ஐதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் ஆராய்ச்சி அகாடமி சிறந்த வளர்ந்து வரும் உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் என்ற விருதை கடந்த செப்டம்பர் மாதம் வழங்கி கெளரவித்தது. இதேபோல், 2021 ஆண்டு தமிழக அரசின் சிறந்த எப்.பி.ஓ விருது உள்ளிட்ட பல விருதுகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Annual agricultural general meeting was held at isha centre coimbatore