இந்தியா போன்ற மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பெட்ரோல், டீசல் நுகர்வும் மிக அதிகமாக உள்ளது. இந்த எரிபொருள்கள் மீது மத்திய அரசு 21 சதவீதமும், மாநில அரசு 16 சதவீதமும் வரி விதித்து வருகிறது.
இதனால் பெட்ரோல், டீசல் எரிபொருள்களின் விலை இந்தியாவில் அதிகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் நடப்பு இடைக்கால பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் ரூ.10 வரை குறைக்கப்படலாம் என அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் பரவி வருகின்றன.
இதற்கிடையில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தால் மக்களின் செலவழிக்கும் திறன் அதிகரிக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2022ஆம் ஆண்டு பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது. இதைப் பின்பற்றி புதுச்சேரி உள்பட பல்வேறு மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தன.
இந்த நிலையில் மீண்டும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்கும்பட்சத்தில் மாநில அரசுகளின் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்தால் அது அரசின் வருவாயை கடுமையாக பாதிக்கும்.
ஏனெனில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.1 குறைத்தால் கூட மத்திய அரசுக்கு ரூ.12,500 கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த 619 நாள்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆகவே எரிபொருள்களின் விலை குறையுமா? அல்லது அப்படியே தொடருமா? என்பதே சாமானியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நரேந்திர மோடி அரசின் மக்களவை தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட் நாளை (பிப்.1) தாக்கல் ஆகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“