/indian-express-tamil/media/media_files/2025/06/01/l3T95tNAnYmbvMzkWU98.jpg)
நீங்கள் எப்போதாவது ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தால், மணமகன் அல்லது மணமகளின் பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து ரொக்க பரிசுகளை பெறுவதை பார்த்திருப்பீர்கள். அது கணிசமான தொகையாக இருக்கும். ஆனால் முக்கியமான கேள்வி என்னவென்றால், அந்த பணம் வரி விலக்கு பெற்றதா இல்லையா என்பதுதான். திருமண பரிசுகளுக்கு வரி விலக்கு உண்டு என்று நீங்கள் நினைக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஒரு பரிசுதானே? இருப்பினும், 2013 ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உங்கள் எண்ணத்தை மாற்றக் கூடும்.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் அறிக்கையின்படி, சண்டிகரைச் சேர்ந்த ராஜேந்தர் மோகன் லால், தனது மகளின் திருமணத்தின் போது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து ரூ. 21 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் பரிசுகளை பெற்றார். இது பல இந்திய வீடுகளில் வழக்கமாக நடக்கும் ஒரு நிகழ்வு தான். மேலும், அவர் அந்தப் பணம் நலம் விரும்பிகளிடமிருந்து கிடைத்த 'மொய்' என்பதற்கான ஆதாரத்தையும் வைத்திருந்தார்.
இருப்பினும், 2007 - 08 நிதியாண்டுக்கான தனது வருமான வரி கணக்கை தாக்கல் செய்தபோது, அவர் ரூ. 21 லட்சத்தை வருமானமாக குறிப்பிடவில்லை. இதனால், அந்த முழுத் தொகையும் அவரது வரி விதிக்கக்கூடிய வருமானத்தில் சேர்க்கப்பட்டது.
ராஜேந்தர், அந்தப் பணம் தனது மகளின் திருமண விழாவில் வழங்கப்பட்டது என்றும், அது ஒரு கலாச்சார பாரம்பரியம் எனவும், அதனை வருமான ஆதாரம் அல்ல என்றும் வாதிட்டார். வருமான வரிச் சட்டத்தில் உள்ள "தனிநபர்" என்ற சொல் மணமகன் அல்லது மணமகளின் பெற்றோர்களையும் உள்ளடக்கும் வகையில் விளக்கப்பட வேண்டும் என்று அவர் வாதிட்டார். ஏனெனில், அவர்களுடைய பிள்ளையின் திருமணத்தின் போது இதுபோன்ற பரிசுகளை பெறுவது வழக்கம் என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.
சட்டம் என்ன சொல்கிறது?
இருப்பினும், சண்டிகரில் உள்ள வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT) அவருக்கு எதிராக தீர்ப்பளித்தது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 56 இன் படி, திருமண பரிசு விலக்குகள், திருமணம் செய்து கொள்ளும் தனிநபருக்கு மட்டுமே பொருந்தும், அவர்களின் உறவினர்களுக்கு அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.
எளிதாக கூறுவதானால், ராஜேந்தர் திருமணம் செய்துகொள்ளவில்லை (அவரது மகள் தான் திருமணம் செய்துகொண்டார்) என்பதால், அவருக்கு வரி விலக்கு தகுதி இல்லை. அவர் பெற்ற ரூ. 21 லட்சம் வரி விதிக்கக்கூடிய வருமானமாகக் கருதப்பட்டது.
நிபுணர்களின் கூற்றுப்படி, சட்டம் "தனிநபரின் திருமணத்தின்போது" பெறப்பட்ட பரிசுகளுக்கு விலக்கு அளிக்கிறது. மேலும் அது மணமகள் அல்லது மணமகனை மட்டுமே குறிக்கிறது, அவர்களின் பெற்றோர் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களை அல்ல. உங்கள் பிள்ளையின் சார்பாக தாராளமான திருமண பரிசுகளை பெறும் பெற்றோராக நீங்கள் இருந்தால், அந்த பரிசுகளுக்கு வரி விதிக்கப்படலாம். திருமணம் செய்து கொள்ளும் நபருக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும். இதில் சம்பந்தப்பட்ட வேறு யாருக்கும் விலக்கு அளிக்கப்படாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.