வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி உயர்வு 100 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
'தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் குடியிருப்போரிடம் இருந்து சொத்து வரி, குடிநீர் வரி, கழிவுநீர் வரி வரிய, குப்பை வரி ஆகியவை வசூலிக்கப்படுகிறது. குடியிருப்பின் அளவு, அதிலுள்ள வசதிகள் மற்றும் அமைந்துள்ள இடத்தின் தன்மையைப் பொறுத்து சொத்து வரி விதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அப்போது மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், பேரூராட்சிகளில் அப்போதைக்கு வழங்கப்பட்டிருந்த வசதிகளின் அடிப்படையில் சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக சொத்து வரி மாற்றியமைக்கப்படவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இந்த வரி உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் சார்பில் கண்டனங்கள் வலுத்தது. உயர்த்தப்பட்ட சொத்து வரியை வாபஸ் பெறக்கோரி வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்தச் சூழ்நிலையில், சொத்து வரி தொடர்பாக தமிழக அரசு விளக்கம் இன்று அளித்துள்ளது. அதில், சொத்து வரி சீராய்வு 2018-19 ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டு முதலே நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புதிய வரிவிகிதத்தின் படி, முன் தேதியிட்டு வரி செலுத்த தேவையில்லை எனவும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருத்தப்பட்ட அரசாணையை அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில், அரசாணை முன்தேதியிட்டு பிறப்பிக்கப்படவில்லை எனவும், சொத்து வரி உயர்வு, 2018- 19 முதல் அரையாண்டு முதல் அமலுக்கு வருவதாகவும், முன்தேதியிட்டு புதிய சொத்துவரியை செலுத்த தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், வாடகை குடியிருப்புகளுக்கு விதிக்கப்பட்ட 100 சதவிகித வரியை 50 சதவிகிதமாக குறைக்கப்படுவதாகவும் தமிழக அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ளது. வரிவிகிதம் உரிமையாளர் குடியிருப்பு மற்றும் வாடகைதாரர் குடியிருப்பு ஆகிய இரண்டுக்கும் ஒரே விகிதத்தில் இருக்கும் எனவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.