Atal Pension Yojana(APY): 60 வயதை கடந்த அனைவரும் பென்சன் பெறும் வகையில், மத்திய அரசு, அடல் பென்சன் யோஜ்னா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது உள்ளவர்கள் இணையலாம். குறைந்தது 20 ஆண்டுகள் பிரீமியம் செலுத்த வேண்டும்.
நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மட்டுமல்லாது, அமைப்பு சாரா தொழிலாளர்கள், சொந்த தொழில் செய்பவர்கள், சிறு சிறு வேலை செய்பவர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது ஓய்வு காலத்தை, பொருளாதார ரீதியில் கஷ்டப்படாமல் கழிக்கும் பொருட்டு, இந்த அடல் பென்சன் யோஜ்னா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஓய்வு காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ. ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை பென்சன் பெறுவதற்கு இந்த திட்டம் வழிவகை செய்கிறது. மாதம் ஒன்றுக்கு ரூ.42 செலுத்தி, ஆயிரம் ரூபாய் பென்சனையும், ரூ.210 செலுத்தி மாதம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் பென்சனையும் பெறலாம்.
இந்த பிரீமியம் தொகையை, மாதமாதம், ஆறு மாதத்திற்கு ஒருமுறை, ஆண்டிற்கு ஒருமுறை என 3 வகைகளில் செலுத்தலாம்.
18 வயது முதல் 40 வயது வரையில் உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து, தங்களது ஓய்வு காலத்தில் பென்சன் பெறலாம். 18 வயதில் ஒருவர் இத்திட்டத்தில் இணைகிறார் என்றால், அவர் ஆயிரம் ரூபாய் பென்சன் பெற மாதம் ஒன்றுக்கு ரூ.42 செலுத்த வேண்டும். அதேநேரத்தில் அவர் மாதம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் பென்சன் பெற விரும்பினால், ரூ.210 மாத தவணையாக செலுத்த வேண்டும்.
ஒருவர் 40 வயதில் இத்திட்டத்தில் சேர்ந்தால், ஆயிரம் ரூபாய் பென்சன் பெற மாதம் ஒன்றுக்கு ரூ.291 செலுத்த வேண்டும். அதேநேரத்தில் அவர் மாதம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் பென்சன் பெற விரும்பினால், ரூ.1,454 மாத தவணையாக செலுத்த வேண்டும்.
மாதம் ரூ.5 ஆயிரம் பென்சன் பெறும் முறையில், ஒருவர் 18 வயதில் இத்திட்டத்தில் சேர்ந்தால், அவர் கட்டும் தொகை ரூ.1.04 லட்சம் ஆகும். இதுவே, அவர் 3வயதில் இத்திட்டத்தில் சேர்ந்தால், அவர் கட்டும் தொகை ரூ.2.66 லட்சமாக அதிகரிக்கும்.