Bank Strike Today: வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் என 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வங்கிச் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, கடந்த 21ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. அதில், வங்கி அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால், இன்று நடைபெறும் போராட்டத்தில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதனால் நாடு முழுவதும் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசகர் தாமஸ் பிராங்கோ கூறுகையில் ''கடந்த 21-ம் தேதி நடைபெற்ற வேலைநிறுத்தத் தில் வங்கி அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால், 26-ம் தேதி (இன்று) நடைபெறும் வேலை நிறுத்தத்தில் 4 லட்சம் வங்கி அதிகாரிகள் உட்பட சுமார் 14 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். வங்கி அதிகாரிகள், ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை உணர்ந்து மத்திய அரசு அதனை நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் போராட்டம் தொடரும்'' என்றார்.
போராட்டத்திற்கான காரணம் என்ன?
பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கு வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதனை கண்டுக் கொள்ளாத மத்திய அரசு, மூன்று வங்கிகளையும் ஒன்றாக இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதுமட்டுமின்றி, 7வது ஊதியக் குழு பரிந்துரையின்படி, குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வுக்கான விதிகளை தளர்த்த வேண்டும், பாரத ஸ்டேட் வங்கியில் உள்ளதுபோல் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமலாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தான் நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைநிறுத்தம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் கூறுகையில், "வங்கிகள் இணைப்பு போன்ற மத்திய அரசின் ஆபத்தான கொள்கைகளைக் கண்டித்து இன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் 15 ஆயிரம், நாடு முழுவதும் 85 ஆயிரம் வங்கிக் கிளைகள் இயங்காது. வங்கி அதிகாரிகள், ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை மத்திய அரசு உணர்ந்து அதற்கான தீர்வைக் காண முன்வர வேண்டும்'' என்றார்.
அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் இன்று வங்கி சேவை முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.