2017ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அளவு 6.8 லட்சம் கோடி ரூபாய் என பாராளுமன்றத்தின் பொதுக்கணக்கு குழு கணக்கிட்டுள்ளது.
அதில் 70 சதவீத தொகை, பெரும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு, திரும்பி வராதவை என்பதும், 1 சதவீதம் மட்டுமே விவசாயிகளின் கடன்தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க, கடந்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் சார்பில், "இனி இதை வசூல் செய்ய இயலாது" என முடிவெடுத்து தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை மட்டும் 3.6 லட்சம் கோடி ரூபாய். அதன் பயனாளிகள் பெருமளவு தொழில் நிறுவனங்கள்தான். ஆனால், இவ்விதமான பெரும் கடன்பெற்ற கார்ப்ரேட் நிறுவனங்களின் கடன்தொகையை வசூல் செய்ய காட்டாத அவசரமும், அதிகாரமும் சிறுகடன் மற்றும் விவசாயக் கடன் வசூலின்போது மட்டும் வங்கிகள் காட்டுவது ஏன் என்ற கேள்விக்கு இன்றுவரை சரியான பதில் இல்லை.
இன்னொருபுறம், விவசாயக் கடன் பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வரும் ஒவ்வொரு நேரத்திலும் அதற்கு எதிராக எழும் பெருங்குரல் - கார்ப்ரேட் நிறுவனங்களின் சார்பான அமைப்புகளிடமிருந்துதான். "வங்கிப் பணம் பொது மக்களின் பணம்" என்று அப்போது முன்வைக்கப்படும் வாதம், கடனைத் திருப்பிக் கட்டாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை என சொல்லும்போது மட்டும் மாறிவிடுவது ஏன் என்பது விளங்கிக் கொள்ள முடியாத புதிராக இன்னும் தொடர்கிறது.
நிரவ் மோடியின் 11,500 கோடி, விஜய் மல்லையாவின் 9000 கோடி, ரோட்டோமேக் பேனா அதிபர் விக்ரம் கோத்தாரியின் 3695 கோடி என, 3 தொழிலதிபர்களால் இன்று பொதுத்துறை வங்கிகள் சந்தித்துள்ள நஷ்டம் 24,195 கோடி ரூபாய். அண்மையில் அறிவிக்கப்பட்ட மராட்டிய மாநில விவசாயக்கடன் ரத்து மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒப்பிட்டால், மேலே சொன்ன 24,195 கோடி ரூபாய் கடனை விவசாயிகளுக்கு கடன்ரத்தாக கொடுத்திருந்தால், சுமார் 60 லட்சம் விவசாயிகள் தங்கள் கடன் சுமையில் இருந்து மீண்டிருப்பார்கள் என்பது கவனிக்கத்தக்கது.