New Rules to Withdraw Money During lockdown 3 period: கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பாதுகாப்பான இடைவெளிக்கான விதிமுறைகளோடு இன்று மூன்றாம் கட்ட பொதுமுடக்க நிலை அமலுக்கு வருகிறது. நோய் தொற்று அதிகமாக காணப்படும் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களைத் தவிர நாட்டின் பிற பகுதிகளில் பொருளாதார மற்றும் இதர செயல்பாடுகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
இதனையடுத்து, தமிழகத்தில் செயல்படும் வங்கிகள் அனைத்தும் இன்று முதல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என்று மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பு தமிழக பிரிவு கூறியுள்ளது.
இரண்டாவது,பொது முடக்கநிலை காலத்தில் (ஏப்ரல் 5 முதல் மே- 3 ) தமிழகத்தில் வங்கிகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட்டன. மூன்றாவது பொது முடக்கநிலையில் தமிழக அரசு குறிப்பட்ட தளர்வுகளை அறிவித்திருப்பதால் வங்கிகள் வரும் மே- 17 வரை மாலை 4 மணி வரை செயல்படும். மேலும், வங்கிக் கிளைகள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
வங்கிகளில் பணம் எடுக்கும் முறையில் மாற்றம்:
கொரோனா காலத்தில் பொது இடங்களில் ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியை உறுதி செய்யும் பொருட்டு, வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. புது விதியின் கீழ்,வங்கி கணக்கு எண்ணின் (அக்கவுண்ட் நம்பர் ) கடைசி இலக்கம் அடிப்படையில் பயனர்கள் வங்கிக்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் மே 11-ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி,
கடைசி இலக்கம் 0 மற்றும் 1 உடையவர்கள் மே 4-ம் தேதி பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
கடைசி இலக்கம் 2 மற்றும் 3 உடையவர்கள் மே 5-ம் தேதி பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் .
கடைசி இலக்கம் 4 மற்றும் 5 உடையவர்கள் மே 6-ம் தேதி பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் .
கடைசி இலக்கம் 6 மற்றும் 7 உடையவர்கள் மே 8-ம் தேதி பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் .
கடைசி இலக்கம் 8 மற்றும் 9 உடையவர்கள் மே 11-ம் தேதி பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் .