வங்கி சேவைகளும், ஜி.எஸ்.டி.யும்

ஜிஎஸ்டி வரி விதிப்பால் வங்கி சேவைகளில் எந்தெந்த இனங்களுக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்பதை விவவிக்கிறார், சேதுராமன் சாத்தப்பன்.

சேதுராமன் சாத்தப்பன்

ஜி.எஸ்.டி. வந்தாலும் வந்தது, வங்கிகளில் கடன்கள் வாங்கியிருந்தவர்கள் எல்லாம் பயந்து போய் இருந்தார்கள். காரணம் என்னவென்றால் வங்கியில் வாங்கிய கடனுக்கு நீங்கள் கட்டும் வட்டிக்கும் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டுமா என்பது தான். முதலில் நம்மில் பலர் ஜி.எஸ்.டி. யின் அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, சரக்கு மற்றும் சேவை வரி. இது தவிர வேறு எதற்கும் இதன் மூலமாக வரி விதிக்கப்படமாட்டாது. ஆதலால் வங்கிகளில் நீங்கள் வாங்கிய கடனுக்கான வட்டிக்கு ஜி.எஸ்.டி. வராது என்பது தான் முக்கியமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது. என்ன நிம்மதியா?

அப்படியெனில் வங்கிகளில் எதெற்கெல்லாம் ஜி.எஸ்.டி. வாங்குவார்கள்? முன்பு நீங்கள் சேவை (சர்வீஸ்) வரி கட்டி கொண்டிருந்தீர்களே அதற்கு மட்டும் தான் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும். ஆனால் முன்பு மொத்தமாக 15 சதவீதம் கட்டிக் கொண்டிருந்தீர்கள், அது தற்போது 18 சதவீதமாகி இருக்கிறது.

என்னென்ன சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும் என்று பார்த்தால் கமிஷன், எக்ஸ்சேஞ்ச், கடன் ஆய்வுக்கட்டணம் போன்ற வங்கிக்கட்டணங்கள் மீது வசூலிக்கப்படும்.

மேலும் வங்கிகள் சர்வீஸ் சார்ஜ் என்று பல சேவைகளுக்கு கட்டனம் வாங்குவார்கள். அதாவது செக் புத்தகத்திற்கும், ஸ்டேமெண்ட் / பாஸ்புக் கொடுப்பதற்கு, காசோலைக்குப் பணம் வழங்கலை நிறுத்துதல் (ஸ்டாப் பேமென்ட்), கணக்கை முடிப்பதற்கான கட்டணம், இயக்காத கணக்கின் மீதான கட்டணம், டி.டி. மற்றும் மேனேஜர் செக் வாங்குவதற்கு, பாதுகாப்பு பெட்டக வசதிக்கான கட்டணம் ஆகியவை மேலும் சில வகை ஆகும்.

கடன் சார்ந்த சேவைக் கட்டணம் என்றால் ஆய்வுக் கட்டணம் (இன்ஸ்பெக்ஷன்), அப்ரைசல் கட்டணம், ப்ராஸசிங் கட்டணம், சான்றிதழ் கட்டணம், எல்.சி., / கியாரண்டி கொடுப்பதற்கான கட்டணங்கள், வெளிநாட்டு பணம் வாங்க / விற்கலில் உள்ள கட்டணம் போன்றவை சில வகை ஆகும்.

வங்கிச் சேவையின் மீது ஜி.எஸ்.டி-யில் (9 சதவிகிதம் மத்திய ஜி.எஸ்.டி-யாகவும் (CGST), 9 சதவிகிதம் மாநில ஜி.எஸ்.டி-யாகவும் (SGST)) 18 சதவிகிதமாகவும் இருக்கும்.

வரும் காலங்களில் என்ன ஆகும்?

முன்பை விட 3 சதவீதம் கூடுதல் கட்டணம் என்பது சிறிது அதிகம் தான். ஆனால் தற்போது ஜி.எஸ்.டி.யில் வங்கிகள் தாங்கள் வாங்கும் ஜி.எஸ்.டி.யை, தாங்கள் கொடுக்கும் ஜி.எஸ்.டி.யுடன் உள்ளீட்டு வரி வரவு செய்து பின்னர் மீதம் உள்ளதை அரசாங்கத்திற்கு செலுத்தினால் போதும் என்ற பயன் இருப்பதால், என் கணிப்பு படி வருங்காலங்களில் பல சேவைக் கட்டணங்கள் குறைக்கப்படும். வங்கிகளுக்கு இடையே போட்டிகள் இருப்பதால் இது நிச்சியம் நடக்கும். சமீபத்தில் பாரத ஸ்டேட் பாங்க் தனது பணபரிவத்தனை (ஆர்.டி.ஜி.எஸ்., / என்.ஈ.எப்.டி.,) கட்டணத்தை சுமார் 70 சதவீதம் வரை குறைத்தது ஒரு உதாரணம் ஆகும். மேலும் ஜி.எஸ்.டி. மூலமாக எந்த ஒரு நிறுவனமும் தங்கள் லாபங்களை கூட்ட முயற்சிக்க கூடாது என்பது வங்கிகள் கட்டாயம் சேவைக் கட்டணங்களை வருங்காலத்தில் குறைக்கும்.

நீங்கள் என்ன செய்யலாம்?

எந்த வங்கி குறைவான சேவைக் கட்டணத்தில் பல சேவைகளை செய்ய முன் வருகிறதோ அந்த வங்கியில் உங்கள் பணபரிவத்தனைகளை வைத்துக் கொள்ளலாம். இது உங்கள் பர்ஸை கடிக்காது.

(கட்டுரையாளர் சேதுராமன் சாத்தப்பன், மும்பையில் வசிக்கிறார்.இவர் தமிழ் வாசகர்களுக்கு தனது வணிக கட்டுரைகளின் மூலம் மிகவும் பரிச்சியமானவர். தற்போது எமிரேட்ஸ் என்பிடி என்ற அமீரக வங்கியில் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியாக மும்பையில் பணியாற்றி வருகிறார். இவரின் தொடர்பு முகவரி sethuraman.sathappan@gmail.com).

×Close
×Close