வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வரும் ஜனவரி 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதனை தாக்கல் செய்வதற்கான கெடு டிசம்பர் 31-ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
எனவே, உங்கள் வரிக் கணக்கை நீங்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லை என்றால் அல்லது பிழைகள் காரணமாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட தகவலை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தால், இந்த நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள், உங்கள் கணக்கு சரியாக தாக்கல் செய்யப்பட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
அபராதம் விதிப்பு
வருமான வரி கணக்கை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்ய தவறினால் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139(4) இன் கீழ் அபராதம் விதிக்கப்படும். இதற்கான அபராதம் உங்கள் ஆண்டு வருமானத்தை பொறுத்து அமையும். உங்கள் ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். உங்கள் வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருந்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
வருமான வரி தாக்கல் செய்வதற்கான வழிமுறை:
1. இ-ஃபைலிங் போர்ட்டலில் உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
2. 'இ-ஃபைல்' என்பதைக் கிளிக் செய்து, 'ஃபைல் இன்கம்டாக்ஸ் ரிட்டர்ன்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. 2024-25 மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுக்கவும்.
4. தாக்கல் செய்யும் முறையை 'ஆன்லைன்' ஆக தேர்ந்தெடுக்கவும்.
5. 'புதிய தாக்கல் தொடங்கு' பொத்தானை கிளிக் செய்யவும்
6. இப்போது, பொருந்தக்கூடிய ITR படிவத்தைத் தேர்ந்தெடுக்கவும்
7. 'தனிப்பட்ட தகவல்' பகுதிக்குச் சென்று, உங்களின் விவரங்கள் அனைத்தும் சரியானவை என்பதை உறுதிப்படுத்தவும்.
8. தாக்கல் செய்யும் பகுதிக்குச் சென்று 139(4)ஐத் தேர்ந்தெடுக்கவும்.
9. பல்வேறு ஆதாரத் தலைப்புகளின் கீழ் உங்களின் அனைத்து வருமான விவரங்களையும் பூர்த்தி செய்து, வரி செலுத்துவதைத் தொடரவும்.