இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு மிக அவசியமான ஒன்றாக உள்ளது. பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்பினால் சரியான தேர்வு தபால் அலுவலக சேமிப்பு தான். ஏராளமான போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் வங்கிகளின் Fixed deposit ஐ விட அதிக பலன் தருகிறது. முதலீட்டோடு சிறந்த வருமானமும் கிடைக்கிறது. தபால் நிலையங்களில் செயல்பட்டு வரும் சேமிப்பு திட்டங்கள் சிலவற்றை காணலாம்..
தொடர் வைப்புக் கணக்கு
தபால் நிலையத்தில் நீங்கள் தொடங்கும் ரெக்கரிங் டெபாசிட் கணக்குக்கான கால வரம்பு 5 ஆண்டுகள் ஆகும். இதை விட குறைவாக திறக்க முடியாது. ஒவ்வொரு காலாண்டிலும் (ஆண்டு விகிதத்தில்) வைப்புத்தொகைக்கு வட்டி கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் கூட்டு வட்டியுடன் இது உங்கள் கணக்கில் சேர்க்கப்படும். தற்போது ரெக்கரிங் டெபாசிட் சேமிப்புத் திட்டத்தில் 5.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
பிபிஎஃப்
பொது வருங்கால வைப்பு நிதி அல்லது பிபிஎஃப் என்பது ஆபத்து இல்லாத முதலீட்டாளர்களுக்கு சிறந்த நீண்ட கால முதலீடாகும். ஏனெனில் இது உத்தரவாத வரி இல்லாத வருமானத்தை வழங்குகிறது. பிபிஎஃப் வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படுகிறது. நடப்பு காலாண்டில் பிபிஎஃப் 7.10 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்தக் கணக்கு 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் பல வருடங்களுக்கு ஐந்து வருடங்கள் மூலம் கணக்கை நீட்டிக்க முடியும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா
மூலம் 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியுடன் இந்த கணக்கினை தொடங்க முடியும். ஓராண்டில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம். இதற்கான வட்டி விகிதம் ஏப்ரல் – ஜூன் 2020 நிலவரப்படி 7.6% ஆகும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலண்டுக்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படும். இது முதலீட்டுக்கு பங்கமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காத்திற்கு உதவியாக இருக்கும்.
மாதாந்திர வருமான திட்டம்
மாதந்தோறும் வருமானம் தரும் இந்த தபால் அலுவலக சேமிப்புத் திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1,500 மற்றும் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். இணைப்புக் கணக்கில் ரூ.9 லட்சம் வரையில் சேமிக்கலாம். இத்திட்டத்துக்கான வட்டி 6.6 சதவீதம். இத்திட்டம் 5 ஆண்டு முதிர்வு காலம் கொண்டது.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்
60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்தக் கணக்கினை ஜாயிண்ட் கணக்காகவும் திறக்கலாம். வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. முதிர்வு கால,ம் 5 வருடம். ஆண்டுக்கு 7.4 சதவீத லாபத்தினை அளிக்கிறது.
தேசிய சேமிப்பு பத்திரம்
அனைத்து இந்திய குடிமக்களும் இத்திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியுள்ளவர். குறைந்தபட்ச முதலீடு ரூ.100, அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை. தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையையும் வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறமுடியும். இத்திட்டத்தில் ஆண்டுக்கு 6.8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
கிசான் விகாஸ் பத்திரம்
இந்திய தபால் துறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களில், மிக முக்கியமான திட்டம் கிசான் விகாஸ் பத்திரம். சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமான மற்றும் பாதுகாப்பான ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் சேமிக்க விரும்புவர்கள் குறைந்தபட்சம், ஆயிரம் ரூபாய் முதல் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச முதலீடு என இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 6.9 சதவீத வட்டி கிடைக்கும். இதில் முதலீடு செய்யப்படும் தொகை 124 மாதங்களில் இருமடங்காக உயர்ந்துவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”