ஆர்.சந்திரன்
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவுக்கு தேவைப்படும் லித்தியம் அயான் அடிப்படையிலான மின்உற்பத்திக் கலன்களைத் தயாரித்து வழங்க, பொதுத்துறை நிறுவனமான பெல் (BHEL)களமிறங்குகிறது. இதற்கு தேவையான தொழில்நுட்பத்தை இஸ்ரோவே வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் அண்மையில் இஸ்ரோ தலைவர் சிவன் முன்னிலையில் கையொப்பமானது.
இஸ்ரோவின் ஒரு அங்கமான விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வுக் கூடம், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ளது. இங்கு நடந்த ஆய்வில்தான் லித்தியம் அயான் பேட்டரிகள் தொழில்நுட்ப ரீதியான வடிவமைக்கப்பட்டன. இவை, விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கை கோள்களில் வைத்து அனுப்பப்படும். அங்கு செயற்கைகோள் செயல்பட தேவையான மின்சாரத்தை இவை உற்பத்தி செய்து வழங்கும். அதோடு, அங்குள்ள கடும் சவாலான சூழலை சமாளிக்க ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, தற்போது அந்த தொழில்நுட்பம் பெல் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு, அதைத் கொண்டு, மின்களன்கள் உருவாக்கப்பட்டு, இஸ்ரோவின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்தியாவின் தேவைகளுக்காக மட்டுமின்றி, பல வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தித் தரும் பணியில் தற்போது அதிக பங்களித்து வருகிறது. அதை ஒரு வணிக வாய்ப்பாக மாற்றியுள்ள இஸ்ரோவுக்கு இவ்வகை லித்தியம் அயான் மின்களங்கள் அதிக அளவில் தேவைப்படுகிறது. இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.