ஆர்.சந்திரன்
11,300 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக, விசாரணை நடந்து வரும் பஞ்சாப் நேஷனல் வங்கி விவகாரத்தில், அமலாக்கப் பிரிவு இன்று 13 இடங்களில் நடத்திய சோதனையில், கணிசமான அளவு வைரம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மும்பையில் உள்ள நிரவ் மோடியின் சமுத்திர மஹால் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டிலும், கலா கோடா நகைக்கடையிலும் இதர 4 இடங்களில் இருந்து மொத்தமாக 5100 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர, நிரவ் மோடியின் மனைவி அமி மோடியின் பெயரில் மும்பை வார்லி பகுதியில் உள்ள குடியிருப்பில், கடந்த 3 மற்றும் 4ம் தேதியே சிபிஐ சோதனை செய்ததாகவும், அதன்பின் அந்த குடியிருப்பு சீலிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இந்த மோசடி குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அமலாக்கப் பிரிவு, வங்கியில் இருந்து முறைகேடாகப் பெற்ற தொகையைக் கொண்டு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு உட்பட்ட 95 இறக்குமதி உள்ளிட்ட பிற வணிக ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.