மலேசியாவின் மிகப்பெரிய நிதியியல் மோசடியில் மையப்புள்ளியாக இருக்கும் ஜோ லோ, ஷாங்காயில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக புலனாய்வு பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். போலி ஆவணங்களுடன் அவர் சீனாவில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுவது, அவரை பிடிக்கும் முயற்சிகளுக்கு மேலும் ஒரு சவாலை ஏற்படுத்தியுள்ளது.
ஜோ லோ என்பவர் மலேசியாவின் முக்கிய நிதியாளர் ஆவார். இவர் 1மலேசியா மேம்பாட்டு பெர்ஹாட் (1MDB) என்ற அரசு முதலீட்டு நிதியில் சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறார். இந்த மோசடி 2015 ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்ததிலிருந்து, ஜோ லோ தலைமறைவாக உள்ளார். இந்த சம்பவம் மலேசியாவின் அரசியல் மற்றும் நிதியியல் அமைப்புகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2018 ஆம் ஆண்டு இவருக்கு எதிராக இன்டர்போல் ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதுடன், அமெரிக்கா மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளாலும் இவர் தேடப்பட்டு வருகிறார்.
வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, திருடப்பட்ட 1MDB நிதியை பயன்படுத்தி ஜோ லோ ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்து வந்தார். அமெரிக்கா முழுவதும் அசையா சொத்துகள், அரிய கலை பொருட்கள், ஒரு தனிப்பட்ட ஜெட் விமானம் மற்றும் சொகுசு படகு வாங்குவது என பல வழிகளில் பணத்தை செலவளித்துள்ளார்.
குறிப்பாக, லியோனார்டோ டிகாப்ரியோவுடன் நட்பு பாராட்டிய ஜோ லோ, மார்ட்டின் ஸ்கோர்செஸ்ஸின் 2013 ஆம் ஆண்டு வெளியான 'தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்' திரைப்படத்திற்கு நிதியுதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில், அமெரிக்க நீதித்துறை, இந்தத் திரைப்படத்திற்கான நிதி, 1MDB பணத்தை மோசடி செய்து பெறப்பட்டது என்று குற்றம் சாட்டியது. டிகாப்ரியோ, நிதி ஆதாரத்தை பற்றி அறியாமல், 2014 ஆம் ஆண்டு கோல்டன் குளோப் விருது பெற்றபோது ஜோ லோவுக்கு நன்றி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையாளர்களான பிராட்லி ஹோப் மற்றும் டாம் ரைட் ஆகியோர் இணைந்து 1MDB ஊழலை அம்பலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினர். 'பில்லியன் டாலர் வேல்' (Billion Dollar Whale) என்ற புத்தகத்தையும் இவர்கள் இணைந்து எழுதியுள்ளனர். சமீபத்தில், 'Finding Jho Low' என்ற நேரலை நிகழ்ச்சியில், ஜோ லோ ஷாங்காயில், புதிய அடையாளத்தில் வசித்து வருவதாக கூறினர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், ஜோ லோ ஷாங்காயில் இருப்பதாக எந்தத் தகவலும் அரசாங்கத்திற்கு வரவில்லை என்று தெரிவித்தார். "என்னிடமோ, எங்கள் அரசிடமோ எந்த தகவலும் இல்லை. நான் ஊடக அறிக்கைகளை படித்தேன். உள்துறை அமைச்சரிடம் இது குறித்து ஆராய வேண்டும்" என்று அவர் பினாங்குவில் ஒரு நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.