/indian-express-tamil/media/media_files/2025/06/12/y01cTdRvv7flE1yKqYa4.jpg)
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து போயிங் நிறுவனத்தின் பங்குகள் 8 சதவீதம் அதிரடியாக சரிந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகையாகும்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம் ஒன்று லண்டன் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.
அந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர். பயணிகளில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் நாட்டவர்கள், 7 போர்த்துகீசியர்கள் மற்றும் ஒரு கனேடிய நாட்டவர் விமானத்தில் இருந்தனர். விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கோர விபத்தில் இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மீட்க்கப்பட்ட உடல்களில் பெரும்பாலானவை கருகிய நிலையில் இருந்துள்ளன. இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் முர்மு, மாநில முதல்வர்கள் மற்றும் உலக நாட்டின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
போயிங் பங்குகள் சரிவு
இந்நிலையில், அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து போயிங் நிறுவனத்தின் பங்குகள் 8 சதவீதம் அதிரடியாக சரிந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகையாகும். இதையடுத்து, விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் பங்குகள் அமெரிக்க சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் 8 சதவீதம் சரிந்துள்ளன.
விமான கண்காணிப்பு தளமான பிலைட்ராடர் 24 ( Flightradar24), அந்த விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் என்றும், சேவையில் உள்ள மிகவும் நவீன பயணிகள் விமானங்களில் ஒன்று என்றும் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக போயிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும், ஆரம்ப அறிக்கைகள் குறித்து அறிந்திருப்பதாகவும், மேலும் தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. போயிங் நிறுவனம் தனது ஜெட் விமானங்களில் பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், புதிய தலைமை நிர்வாக அதிகாரி கெல்லி ஆர்த்பெர்க்கின் கீழ் உற்பத்தியை அதிகரிக்கவும் முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில், அகமதாபாத்தில் கோர விபத்து நிகழ்ந்திருப்பது அந்த நிறுவனத்தின் மீதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் போயிங்கின் பங்குகள் சுமார் 8 சதவீதம் சரிந்து 196.52 டாலராக இருந்தன.“அகமதாபாத் விபத்து சம்பவத்தை தொடர்ந்து பங்குகள் சரிந்துள்ளனர். மேலும் சமீபத்திய ஆண்டுகளில் போயிங் விமானங்களையும் போயிங்கையும் பாதித்த பிரச்சினைகள் குறித்த திருத்தப்பட்ட அச்சங்கள் உள்ளன” என்று ஐ.ஜி குழுமத்தின் ஆய்வாளர் கிறிஸ் பியூச்சாம்ப் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.