ஆர்.சந்திரன்
வரும் நிதியாண்டில் தனது தொலைத் தொடர்பு வலை பின்னலை வலுப்படுத்தவும், விரிவாக்கவும் பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது. அரசுத் துறையின் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் பாரத் நெட், ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கறை வலைபின்னல், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் தீவுகளில் தொலைத் தொடர்பு வசதிகளை விரிவாக்கவும், வலுப்படுத்தவும் 5 முதல் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட உள்ளது. மறுபுறம் ஏற்கனவே உள்ள வலைபின்னல்களில் சேவையின் திறன், அளவு இரண்டையும் அதிகரிக்க 4,300 கோடி ரூபாயை முதலீடு செய்யவும் பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் அனுபம் ஸ்ரீவத்சவா கூறியுள்ளார்.
மேலும், 3ஜி சேவை வழங்குவதற்காக புதிதாக 12,000 தொலைத் தொடர்பு கோபுரங்களையும், 4ஜி சேவை வழங்க 10,000 தொலைத் தொடர்பு கோபுரங்களையும் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மறுபுறம், அண்மையில் ஏர்செல் நிறுவனம் தனது தொலைத் தொடர்பு சேவையை நிறுத்திக் கொண்டதால், அதன் வாடிக்கையாளர்கள் உட்பட, கடந்த மாதத்தில் மட்டும் 3.96 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.