ஆர்.சந்திரன்
கொல்கத்தாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிறுவனமான ஆர்பி இன்ஃபோ சிஸ்டம்ஸ் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது 500 கோடி ரூபாய் மோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ பதிவு செய்துள்ள இந்த வழக்கில் தொடர்புள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ஷிபாஜி பாஞ்சா மேற்கு வங்க மாநில முதல்வரான மம்தா பானர்ஜிக்கு நெருக்கமான நண்பர். வேறு சில இயக்குனர்களுடன் சேர்த்து இவர் மீதும் தில்லி போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, 2015ம் ஆண்டில் மம்தாவுடன் பயணித்து இவர் டாக்கா நகரில் இருந்து வந்தபோது, அப்போதைய மேற்கு வங்க மாநில பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது பாஞ்சா மேற்கு வங்க மாநில அரசின் பல்வேறு ஆலோசனைக் குழுக்களில் அங்கம் வகிப்பவர். திரைப்படத் தயாரிப்பிலும் தொடர்பு கொண்டுள்ள இவர், ஆர்பி குழும நிறுவனங்களைத் தொடங்கியவர்களில் ஒருவர்.
இவர்களது நிறுவனம், தற்போது கனரா வங்கித் தலைமையிலான குழுவிடமிருந்து சுமார் 515 கோடி ரூபாய்க்கு கடன் பெற்றுள்ளது. இதற்கு ஆர்பி குழுமம் தவறான தகவல்களை அளித்தும், போலியான பங்குபத்திரிங்களைக் காட்டியும் இந்த கடனைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல, தங்களுக்கு வர வேண்டிய தொகை என தவறான, அதிகரித்த தொகை குறிப்பிடப்பட்ட ஆவணங்களை இந்த நிறுவனம் வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
ஸ்டேட் பேங்க் ஆப் பிக்கானூர் அண்ட் ஜெய்ப்பூர், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, அலகாபாத் பேங்க், ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பெடரல் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியலா போன்றவை இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி செய்த மோசடி குறித்த தகவல் வெளியான பின் பல வங்கிகள் இதுவரை கிடப்பில் போட்டு வைத்தது போன்ற பல வழக்குகளையும் தூசி தட்டி எடுத்து சிபிஐயிடம் அளித்து வருவதாக தெரிகிறது. அதனால்தான் தொடர்ந்து பல புதிய வங்கி மோசடி புகார்கள் வெளியான வண்ணம் உள்ளன.