/indian-express-tamil/media/media_files/2025/06/11/STC1oQXZACWvaxr9DXyS.jpg)
நம்முடைய வருமானத்தை மீறி செலவுகள் செய்யும் போது வருமான வரித்துறையினரிடமிருந்து நோட்டீஸ் அனுப்பப்படும். அந்த வகையில், எந்த அளவிற்கு நம்முடைய பணப்பரிவர்த்தனைகள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பாஸ்வாலா யூடியூப் சேனலில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
வங்கிகளில் பணப்பரிவர்த்தனைகளை பொறுத்தவரை சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகளில் இருந்து இவற்றை மேற்கொள்கிறோம். உதாரணமாக, சேமிப்பு கணக்கிற்கான பரிவர்த்தனை வரம்பு ரூ. 10 லட்சம் என இருந்தால் நடப்பு கணக்கிற்கான வரம்பு ரூ. 50 லட்சம் வரை இருக்கலாம்.
அதன்படி, சேமிப்பு கணக்கில் அதன் வரம்பை கடந்து பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும் போது, அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவிடுவார்கள். இது ஒரு நிதியாண்டுக்கு கணக்கிடப்படும். இதற்கான ஆவணங்களை சரியாக சமர்ப்பித்து விட்டால், அபராதம் உள்ளிட்டவை விதிக்கப்படாது.
வருடாந்திர பணம் எடுக்கும் தொகை 20 லட்சத்திலிருந்து 1 கோடி வரை இருந்தால், 2% வரி (Tax Deducted at Source - TDS) விதிக்கப்படும். வருடாந்திர பணம் எடுக்கும் தொகை 1 கோடியை தாண்டினால், 5% TDS விதிக்கப்படும். எனவே, இதனை சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம் அபராதங்களை தவிர்த்து விடலாம்.
மேலும், யு.பி.ஐ பணப்பரிவர்த்தனைகளுக்கும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 500 பரிவர்த்தனைகளுக்கு குறைவாக மேற்கொள்ளும் போது பிரச்சனை ஏற்படாது. இதனை தாண்டும் போது சரியான கணக்கு வைத்திருப்பது அவசியம் ஆகும். இது தவிர வங்கிகளில் முதலீடு செய்துள்ள நிலையான வைப்பு நிதியின் வருமானம் ரூ. 10 லட்சத்தை தாண்டும் போது, வருமான வரித்துறையினர் கேள்வி எழுப்புவார்கள்.
கிரெடிட் கார்டு மூலம் ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமாக செலவளித்தால், வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் அனுப்பப்படும். எனவே, இதில் கவனமாக இருக்க வேண்டும். மொத்தமாக பார்க்கும் போது மூன்று காரணங்களால் வருமான வரித்துறையினரிடமிருந்து நோட்டீஸ் அனுப்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அதன்படி, வருமானம் குறைவாக இருந்து செலவு அதிகமாக இருந்தால், செலவுகள் குறைவாக இருந்தாலும் வருமானம் மிக அதிகமாக இருக்கும் சூழலில், வருமானம் இல்லாமல் செலவுகளை மேற்கொள்ளும் போது என இது போன்ற நிலைகளில் மட்டுமே வருமான வரித்துறையின் கவனம் நம் மீது திரும்பும்.
இதற்காக நம்முடைய செலவு மற்றும் வருமானம் ஆகியவற்றுக்கு முறையான ஆவணங்கள் மற்றும் கணக்கு வைத்திருந்தால் நாம் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.