cash-out at ATMs : ஏ.டி.எம்.-ல் பணம் இல்லை என்றால் அடுத்த ஏ.டி.எம் தேடி ஓடும் அவஸ்தை இருக்கிறதே! சாமனியனுக்கே அந்த வலி புரியும். அவசர ஆத்திரத்திற்கு பணம் எடுக்க ஏ.டி.எம். என்றால் அங்கே பணம் இல்லாமல் இருப்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆர்.பி.ஐ. ஒரு விதியை அறிவித்துள்ளது.
ஒரு ஏ.டி.எம்.-ல் ஒரு மாதத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக பணம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த ஏ.டி.எம்.ஏற்கு ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியானது வருகின்ற அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஒயிட் லேபிள் ஏடிஎம்களில் (டபிள்யூஎல்ஏ), அந்த குறிப்பிட்ட டபிள்யூஎல்ஏவின் பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் வங்கிக்கு அபராதம் விதிக்கப்படும்.
வங்கி, தனது விருப்பப்படி, WLA ஆபரேட்டரிடமிருந்து அபராதத்தை திரும்பப் பெறலாம் என்று ஒரு RBI அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வங்கிகளின் எம்டி மற்றும் சிஇஓக்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பில், பணத்தை வழங்கும் கடமை தங்களுக்கு இருப்பதாகவும், வங்கிகள் தங்கள் பரந்த கிளைகள் மற்றும் ஏடிஎம் நெட்வொர்க்குகள் மூலம் பொதுமக்களுக்கு ரூபாய் நோட்டுகளை வழங்குவதன் மூலம் இந்த கடமையை நிறைவேற்ற முடியும் என்றும் கூறியுள்ளது.
ஏ.டி.எம்.களில் பணம் இல்லாத சூழலில் நடைபெறும் விசயங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றும், பணம் சரியான நேரத்தில் கிடைக்காத காரணத்தால் பொதுமக்கள் பலரும் பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கைகள் மூலம் வங்கிகள் தங்களின் நெட்வொர்க் மற்றும் சிஸ்டத்தை முறையாக பயன்படுத்தி ஏ.டி.எம்.களில் தனி கவனம் செலுத்துவது உறுதி செய்யப்படும் என்று ஆர்.பி.ஐ எதிர்பார்க்கின்றது.
இத்திட்டத்தின்படி, வங்கிகள் ஏடிஎம்களின் செயலிழப்பு குறித்து கணினி உருவாக்கிய அறிக்கையை ரிசர்வ் வங்கியின் ”இஸ்யூ துறைக்கு” வங்கிகள் வழங்குகின்றன. WLAO-களைப் பொறுத்தவரையில், அந்த ஏ.டி.எம்மின் பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் வங்கிகள் இந்த அறிக்கையை வெளியிட வேண்டும். ஒவ்வொரு மாதத்திற்கான அறிக்கையையும் அடுத்த மாதத்தின் முதல் ஐந்து நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். அதாவது அக்டோபர் மாதத்தின் அறிக்கையை நவம்பர் 5ம் தேதி அன்று அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil