கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி முன்னிரவில் பிரதமர் மோடி, பணமதிப்பு நீக்க அதிரடி திட்டத்தை அறிவித்தார். "500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் மதிப்பிழக்கும்" என்று அப்போது எடுத்த முடிவுக்கு பின்னணியில் பல காரணங்கள் சொல்லப்பட்டன. அதில், நாட்டில் நிலவும் ரொக்கப் பணப் புழக்கத்தைக் குறைத்து, அதை டிஜிட்டல் மயமாக்கப் போவதாக சொல்லப்பட்டதும் ஒன்று. ஆனால், அந்த முயற்சியும்கூட தற்போது வெற்றிபெறவில்லை என்பது ரிசர்வ் வங்கியின் தகவல்களை பார்க்கும்போது தெரிய வருகிறது.
ரிசர்வ் வங்கி தகவல்படி, 2016ம் ஆண்டு நவம்பர் 8 அன்று இந்தியாவில் புழக்கத்தில் இருந்த இந்திய ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 17.97 லட்சம் கோடிகள். அதில் 0.06 சதவீதம் அளவுக்குத்தான், இன்று ரொக்கப் பணப் புழக்கம் குறைந்துள்ளது.
மீதியுள்ள 99.94% ரொக்கம், மக்களிடையே இன்றும் தொடர்கிறது என்பது ரிசர்வ் வங்கியின் அண்மைய தகவலில் தெரிய வருகிறது. அதாவது, இந்திய ரிசர்வ் வங்கி 2018ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி வெளியிட்ட தகவல்படி, நாட்டில் புழக்கத்தில் உள்ள பணத்தின் அளவு 17.78 லட்சம் கோடி ரூபாய். இது அண்மையில் வெளியிடப்பட்ட புதிய 200 ரூபாய் தாள் உள்ளிட்டவை அடங்கியது.
எனவே, ரொக்கப் பணப் புழக்கத்தைக் குறைக்கும் மத்திய அரசின் முயற்சியில் எந்த முன்னேற்றமும் இல்லையோ என்ற கேள்வி எழுகிறது.