வீடியோகான் குழுமத்துக்கு கடன் வழங்கிய முறைகேடு புகாரில் சிக்கி, தற்போது சிபிஐ விசாரணை எனும் சந்தேக வலையில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சர் தனக்கு பெண் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்காமல் ரத்து செய்துள்ளார்.
ஃபிக்கி என குறிப்பிடப்படும் இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புக்கு தனியாக பெண் தொழில்முனைவோர் பிரிவு ஒன்று உள்ளது. அதன் சார்பில் சிறந்த பெண் சாதனையாளர்களை தேர்வு செய்து விருது வழங்கப்படும். அவ்வாறு ஒரு விழா நாளை மறுநாள் அதாவது எப்ரல் 5ம் தேதி நடக்க இருந்தது. அதில் 10 பெண்களுக்கு அளிக்கப்பட இருந்த பெண் சாதனையாளர் விருதில் ஒன்று ஐசிஐசிஐ வங்கியின் சாந்தா கோச்சருக்கு அளிக்கப்படுவதாக முடிவாகியிருந்தது.
இந்த விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குவதாக முடிவு செய்து அவர் அழைக்கப்பட்டிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இது குறித்து அழைப்பிதழ் தொழில்துறையின் அனைத்து முக்கியஸ்தர்களுக்கும் அனுப்பப்பட்டு இருந்தது.
பிக்கி பெண்கள் அமைப்பின் தேர்வுப்படி, வங்கி மற்றும் நிதித்துறையில் சிறந்த பணியாற்றிய பெண் சாதனையாளராக ஐசிஐசிஐ வங்கிளின் மேலாண் இயக்குளராகவும் பொறுப்பு வகித்த சாந்தா கோச்சர் தேர்நதெடுக்கப்பட்டிருந்தார். இவர்தவிர, எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆர்த்தி விஜ், பாலாஜி டெலிபிலிம்ஸின் எக்தா கபூர், நடிகை டிங்கிள் கண்ணா போன்ற பிரபலங்கள் சிலரும் விருது பெறுவதாக இருந்தது.
ஆனால், தற்போது சிபிஐ விசாரணை வலையில் உள்ள ஒருவருக்கு நாட்டின் குடியரசுத் தலைவர் விருது வழங்குவதா என்ற கேள்வி எழுந்தது. எனினும், அந்த சங்கடத்தைத் தவிர்க்கும் விதமாக, சாந்தா கோச்சரே அந்த விழாவில் பங்கேற்பதை தவிர்க்க முடீவு செய்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தகவல் அளித்துள்ளதாக தெரிகிறது. அதனால், ஃபிக்கி பெண்கள் அழைப்பு மீண்டும் ஒரு புதிய அழைப்பை பலருக்கும் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சர் நடத்தி வந்த ஒரு நிறுவனத்தில் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் முதலீடு செய்து, பின்னர் அதை குறைந்த விலைக்கு தீபக் சோச்சருக்கே விற்றுவிட்டார் என செய்திகள் உள்ளன.
இது தொடர்பாகவே விசாரணை நடந்து வருகிறது. மறுபுறம் தீபக் கோச்சரின் சகோதரர் ஐசிஐசிஐ வங்கியின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் கடன்களை பெற்றுத் தரும் பணியில் ஆலோசனை அளித்து வந்தார் எனவும், அதில் பயன் அடைந்தார் எனவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அனைத்தும் சிபிஐயின் விசாரணை வலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.