"ஹாலிவுட் படத்தயாரிப்புச் செலவைவிட குறைவு" - சந்திரயான் 2 பற்றி இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரயான் 2 பயணத்துக்கு 800 கோடி ரூபாய் செலவாகும். ஹாலிவுட்டில் 2014ல் தயாரான "இன்டர்ஸ்டெல்லர்" என்ற திரைப்படத்தின் பட்ஜெட் 1,062 கோடி ரூபாய்.

ஆர்.சந்திரன்

“வரும் ஏப்ரல் மாதத்தில், இந்தியாவின் சந்திரயான் 2 பயணத் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும், அதற்கான செலவு ஹாலிவுட் திரைப்படமான “இன்டர்ஸ்டெல்லர்” தயாரிப்பு செலவைவிட குறைவு எனவும் இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 2 பயணத் திட்டம் பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “சந்திரயான் 2 பயணத்துக்கு 800 கோடி ரூபாய் செலவு என நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஆனால், ஹாலிவுட்டில் 2014ம் ஆண்டிலேயே தயாரான “இன்டர்ஸ்டெல்லர்” என்ற அறிவியல் புனைக்கதை அடிப்படையிலான திரைப்படத்தின் பட்ஜெட் 1,062 கோடி ரூபாய். இது மட்டுமல்ல. 2013ல் செவ்வாய் கிரக ஆய்வுக்கு நாம் அனுப்பிய மங்கல்யானுக்கு நாம் 470 கோடி ரூபாய் செலவிட்டோம். அதே காலத்தில் ஹாலிவுட்டில் தயாரான “கிராவிட்டி” திரைப்படத்துக்கு ஆன செலவு 644 கோடி ரூபாய் என்றும் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவால் சிக்கனச் செலவில், உயர் அறிவியல் தொழில்நுட்பத் திட்டங்களை செயல்படுத்த முடிவது எப்படி என்றும் அவர் விளக்கினார். “ஒட்டுமொத்த நடைமுறையையும் முதலில் எளிமையாக்குவது, சிக்கலான பெரும் அம்சங்கள் இருந்தால், அதையே சிறு வடிவில் முயற்சி செய்வது, தரக்கட்டுப்பாட்டில் இம்மியும் பிசகாதிருப்பது, நமது முயற்சியின் பலன்களை எந்த அளவு அதிகபட்ச பயன்பாட்டுக்கு உட்படுத்த முடியுமோ அவ்வளவு முயல்வது போன்றவைதான் சிக்கன செலவில், நமது வெற்றிக்குக் காரணம்” எனவும் அவர் கூறியுள்ளார்.

“அனேகமாக, சந்திரயான் 2 பயணம் ஏப்ரல் மாதத்தில், சரியான ஒரு நாளைத் தேர்வு செய்து செயல்படுத்துவோம். விடியற்காலையில் தொடங்கும் இந்த பணி, இரவு வரை என, தொடர்ந்து நீண்ட கண்காணிப்புக்கு உட்பட்ட காரியமாக இருக்கும்” எனவும் அவர் கூறியுள்ளார். “ஒருவேளை ஏப்ரலில் இது சாத்தியப்படவில்லை என்றால், அடுத்து வரும் நவம்பரில்தான் இதற்கான வாய்ப்பு. எனவே, தற்போதைய நிலையில் இதற்கான இறுதி தேதியை சொல்வதற்கில்லை” எனவும் அவர் கூறியுள்ளார்.

“வழக்கமாக, நிலவைக் குறிவைக்கும் அமெரிக்காவின் நாசாவோ, ரஷ்யாவோ, அவர்களது விண்கலத்தை நிலவின் பூமித்திய ரேகை போன்ற மையப் பகுதியில் தரையிறக்குவதுதான் வழக்கம். ஆனால், நாம் நமது சந்திரயான் 2-ஐ நிலவின் தென் துருவத்துக்கு அருகில் களமிறக்கப் போகிறோம். அங்குதான் பல லட்சக் கணக்கான ஆண்டுகள் பழைமையான பாறைகள் உள்ளன. அவற்றை ஆய்வு செய்வதன் மூலம்…., நிலவின் அந்த பரப்பு பற்றிய தகவல்களைப் பெறுவதன் மூலம்… நிலவைப் பற்றி மட்டுமுல்ல; இந்த அண்டத்தைப் பற்றியும் இன்னும் சிறப்பாக புரிந்து கொள்ள முடியும்” எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

×Close
×Close