How To Check LIC Plan And Scheme: லைஃப் இன்சூரன்ஸ் ஆஃப் இந்தியா எனப்படும் எல்.ஐ.சி தனது பாலிசிதாரர்களுக்கு ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது இனிமேல், எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் தங்களது எல்.ஐ.சி பாலிசி அல்லது பாலிசியின் மற்ற விஷயங்களைப் பற்றி, தெரிந்துக் கொள்ள எல்.ஐ.சி கிளையைக்கு செல்ல தேவையில்லை. அவர்கள் இப்போது பாலிசி தொடர்பான விவரங்களை ஆன்லைனிலேயே சரிபார்க்கலாம். அதற்கு எல்.ஐ.சி-யின் அதிகாரப்பூர்வ தளமான licindia.in அல்லது ebiz.licindia.in - ஐ பார்வையிட வேண்டும். இந்தத் தளங்களை லாகின் செய்துக் கொள்வதன் மூலம், முதிர்வு, செலுத்தப்பட்ட பிரீமியம், பாலிசியின் இதர விஷயங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ள எல்.ஐ.சி பாலிசியின் ஸ்டேட்மெண்ட் ஆகியவற்றை தெரிந்துக் கொள்ளலாம்.
அதோடு பாலிசி போனஸ் தகவல்களையும் இதன் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். இண்டர்நெட் வசதி இல்லாதவர்கள் எஸ்.எம்.எஸ் மூலமாகவும் எல்.ஐ.சி-யின் இந்த வசதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
எல்.ஐ.சி- பாலிசியின் நிலையை ஆன்லைனில் எப்படி பார்ப்பது?
எல்.ஐ.சி பாலிசியின் நிலையை சரிபார்க்க, முதலில் பாலிசிதாரர்கள் செய்ய வேண்டியது licindia.in அல்லது ebiz.licindia.in தளத்தை லாக் இன் செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாலிசி எண், பிறந்த தேதி போன்ற அவர்களின் தனிப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்து எல்.ஐ.சி-யில் பதிவு செய்துக் கொள்ளவும். ஒருமுறை பதிவுசெய்து விட்டால் போதும், பின்னர் அந்த எல்.ஐ.சி அக்கவுண்ட் மூலம் உங்கள் பாலிசியின் நிலையை எப்போது வேண்டுமானாலும் செக் செய்துக் கொள்ளலாம்.
எல்.ஐ.சி பாலிசியின் நிலை, போனஸ் ஆகியவற்றை எஸ்.எம்.எஸ்ஸில் பார்க்க...
அவ்வளவாக இண்டெர்நெட் பயன்படுத்தாத எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு, எஸ்எம்எஸ் சேவையைத் தொடங்கியுள்ளது எல்.ஐ.சி நிறுவனம். இது அவர்களின் பாலிசியின் நிலை மற்றும் பிற விவரங்களை அறிய உதவும். பாலிசிதாரர் 9222492224 என்ற எண்ணுக்கு, LICHELP என டைப் செய்து, <பாலிசி எண்>-ணைக் குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். இதற்கு எந்தவொரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இந்த எஸ்.எம்.எஸ் சேவை முற்றிலும் இலவசம். 56677 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி உங்கள் பாலிசி குறித்த விவரங்களை உடனடியாக தெரிந்துக் கொள்ளவும் முடியும்.
எல்.ஐ.சி பிரீமியம் பற்றிய தகவல்களை அறிய 56677 என்ற எண்ணுக்கு 'ASKLIC PREMIUM' என எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். உங்களின் எல்.ஐ.சி பாலிசி முடிந்துவிட்டால், 56677 என்ற எண்ணுக்கு 'ASKLIC REVIVAL' என டைப் செய்து அனுப்ப வேண்டும். எல்.ஐ.சி பாலிசியின் போனஸைப் பற்றி அறிய, பாலிசிதாரர் மேற்கூறிய எண்ணுக்கு 'ASKLIC BONUS' என எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும்.
ஒரு வேளை குறுஞ்செய்தி அனுப்ப தெரியாத பாலிசிதாரர்கள் என்றால், என்ன செய்வது? அத்தகைய பாலிசிதாரர்களுக்கும் எல்.ஐ.சி ஒரு அற்புதமான சேவையை வழங்கி வருகிறது. அப்படியான பாலிசிதாரர்கள் 022 6827 6827 என்ற எண்ணுக்கு அழைத்து பாலிசி தொடர்பான அனைத்து விவரங்களையும் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம்.