Post Office Savings Scheme | பொதுத்துறை வங்கிகள் வழங்கும் ஃபிக்ஸட் டெபாசிட் (FD) உடன் ஒப்பிடும்போது, சிறு சேமிப்புத் திட்டங்கள் சிறந்த வருமானத்தைத் தருகின்றன. இந்தத் திட்டங்கள் போட்டி வட்டி விகிதங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு நன்மையையும் வழங்குகின்றன.
மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இது தற்போது 8.2 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடுகள் ரூ. 1,000 இன் மடங்குகளில் வரவேற்கப்படும்.
அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ. 30 லட்சமாக தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்தத் திட்டத்தில் முதலீடுகள் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு பெற தகுதியுடையவை.
கிஷான் விகாஸ் பத்ரா
கிஷான் விகாஸ் பத்ரா திட்டமானது நிலையான வட்டி விகிதத்தையும் உத்தரவாதமான வருமானத்தையும் வழங்குகிறது. வரி விலக்கு பலன் எதுவும் இல்லை. தற்போது, கிசான் விகாஸ் பத்ரா ஆண்டுக்கு 7.5 சதவீத கூட்டு வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில், முதலீடு செய்யப்பட்ட தொகை 115 மாதங்களில் இரட்டிப்பாகும், இது 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்களுக்கு சமம். முதலீடு செய்யக்கூடிய தொகைக்கு அதிகபட்ச வரம்பு இல்லை.
போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்
இந்தத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு நிலையான வருமானத்தைப் பெறுவதற்கான பலனை வழங்குகிறது. குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.1,500 ஆகவும், அதிகபட்சம் தனிநபர் கணக்குகளுக்கு ரூ.9 லட்சமாகவும் உள்ளது.
கூட்டுக் கணக்குகளுக்கு ரூ.15 லட்சமாகவும் இருக்கும். சம்பாதித்த வட்டி வரிவிதிப்புக்கு உட்பட்டது. மேலும் இந்த திட்டம் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு பலன்களை வழங்காது. தற்போது, இந்தத் திட்டம் 7.4 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது. மாதந்தோறும் வட்டி செலுத்தப்படுகிறது.
தேசிய சேமிப்பு சான்றிதழ்
இது உத்தரவாதமளிக்கப்பட்ட முதலீடு மற்றும் சேமிப்புத் திட்டமாகும். இது வருடாந்திர கூட்டு வட்டி விகிதமான 7.7 சதவீதத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில், குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 1,000, அதிகபட்ச முதலீடுக்கு வரம்பு இல்லை. கூடுதலாக, இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் எத்தனை கணக்குகளையும் திறக்கலாம். இந்த திட்டத்தில் முதலீடுகள் வரி விலக்கு நன்மைகளுக்கு தகுதியுடையவை ஆகும்.
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்
இந்தியப் பெண்களிடையே சேமிப்புக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் இந்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இது 7.5 சதவிகிதம் வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது, காலாண்டுக்கு ஒருமுறை கூட்டப்பட்டது. இருப்பினும், இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய வரிச் சலுகை எதுவும் இல்லை. வட்டி வருமானம் வரிக்கு உட்பட்டது. முதலீட்டாளரின் வருமான வரி அடுக்குக்கு ஏற்ப வரி கழிக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“