ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் என பல பெரிய வங்கிகள், மூத்த குடிமக்களின் நிலையான வைப்பு நிதிக்கு வட்டி விகிதங்களை திருத்தி அமைத்துள்ளன. குறிப்பாக, 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயது உடைய மூத்த குடிமக்களுக்கு, 25 முதல் 75 வரை அதிகமான அடிப்படை புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இது மற்ற வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை புள்ளிகளை விட அதிகம்.
இந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், இந்தியன் பேங்க், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகள் வழங்கக் கூடிய வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்கள் குறித்து காண்போம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
‘எஸ்.பி.ஐ பேட்ரன்ஸ்’ என்ற டெர்ம் டெபாசிட் திட்டத்தை மூத்த குடிமக்களுக்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தொடங்கியுள்ளது. இது, 3 ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு 7.60% அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்களுக்கு 10 அடிப்படை புள்ளிகள் அதிகமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரூ. 1000-க்கும் வைப்பு நிதி திட்டத்தை தொடங்க முடியும்.
பஞ்சாப் நேஷனல் பேங்க்
பஞ்சாப் நேஷனல் பேங்க் மூலமாக மூத்த குடிமக்களுக்கு, வட்டி விகிதத்தில் 30 அடிப்படை புள்ளிகள் அதிகமாக கிடைக்கிறது. இங்கு அதிகபட்சமாக 400 நாட்கள் வைப்பு நிதி திட்டத்திற்கு 8.1% வட்டி வழங்கப்படுகிறது.
இந்தியன் பேங்க்
இந்தியன் பேங்கில் மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதி திட்டத்தில் 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தில் அதிகமாக கிடைக்கிறது. 400 நாட்கள் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் 8.05% வட்டி கிடைக்கிறது. இது வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவிலும் மூத்த குடிமக்களுக்கு 25 அடிப்படை புள்ளிகள் கூடுதலாக வழங்கப்படுகிறது. மேலும், 456 நாட்கள் வைப்பு நிதி திட்டத்தில், 8.05% வட்டியை மூத்த குடிமக்களுக்கு வழங்குகிறது.