மார்ச் 31 தேதிக்குப் பின் காசோலைகள் செல்லாது : பாரத ஸ்டேட் வங்கி அதிரடி எச்சரிக்கை

புதிய காசோலைகளைப் பெற வங்கிக் கிளையை நேரிலோ, ஏடிஎம் இயந்திரம் மூலமோ, இணையம் மூலம் onlineSBI.com என்ற முகவரியில் தொடர் கொண்டோ பெற்றுக் கொள்ளலாம்.

ஆர்.சந்திரன்

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணந்த 5 துணை நிறுவனங்களில் காசோலைகளை மார்ச் 31க்குப் பின் பயன்படுத்த வேண்டாம் என வங்கி உத்தரவிட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்த அதன் 5 துணை நிறுவனங்கள் மற்றும் பாரத மகிளா வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பழைய வங்கியில் அவர்கள் பெற்றிருந்த காசோலையை பயன்படுத்த வரும் மார்ச் 31ம் தேதிதான் கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த காசோலைகள் செல்லத்தக்கவை அல்ல என்பதால், அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பாரத ஸ்டேட் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

வங்கித்துறையில் சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப, சிறு வங்கிகளை இணைத்து பெரிய வங்கிகளை உருவாக்க நினைத்து காரியத்தில் இறங்கியுள்ள மத்திய அரசு, ஸ்டேட் பேங்க் ஆப் பிக்கானூர் & ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் போன்ற அதன் துணை நிறுவனங்களாக இயங்கி வந்த தனி வங்கிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதேபோல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் பெண்களுக்கென தனியாகத் தொடங்கப்பட்ட பாரத மகிளா வங்கியையும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைத்துவிட்டனர்.

எனினும் அந்த 6 வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் முன்னர் பெற்ற காசோலை போன்றவற்றை பயன்படுத்த சிறிது காலத்தக்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு செப்டம்பர் 2017 வரை என கால வரம்பு அறிவிக்கப்பட்டது. அது பின்னர் டிசம்பர் 31ம் தேதி என தளர்த்தப்பட்டது. எனினும் பல வாடிக்கையாளர்கள் முழுமையாக மாறாமல் தொடர்ந்தது தெரிய வந்தது. அதனால், தற்போது பாரத ஸ்டேட் வங்கி இறுதி எச்சரிக்கையாக, புதிய நிதியாண்டில் இருந்து புதிய காசோலைகளை மட்டும்தான் பயன்படுத்தலாம். பழைய காசோலைகளை மார்ச் 31ம் தேதிக்கு முன்பு காசாக்கும் விதமாக பயன்படுத்தி விடும்படி கேட்டக கொண்டுள்ளது. எந்த காரணத்திற்காகவும் பழைய காசோலைகளை புதிய ஆண்டில் பயன்படுத்த இயலாது என தெரிவித்துள்ளது.

மேலும், புதிய காசோலைகளைப் பெற வங்கிக் கிளையை நேரிலோ, ஏடிஎம் இயந்திரம் மூலமோ, இணையம் மூலம் onlineSBI.com என்ற முகவரியில் தொடர் கொண்டோ பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அதேபோல, முந்தைய வங்கி பெயரில் ஆன்லைன் பேங்கிங் வசதி பெற்றிருநதால், அதே பெயரில் இ மெயில் முகவரியில், மொபைல் எண்ணில் தொடர்ந்து சேவை பெறலாம் எனவும், நெட் பேங்கிங் எனப்படும் இணையதள வசதிக்கு மட்டும் onlinesbi.com என்ற முகவரியில் அணுகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல, வங்கிக் கிளைகளின் IFSC எண்களை மாற்றியுள்ளதாகவும் சுமார் 1300 கிளைகளுக்கு இந்த மாற்றம் நடந்துள்ளதாகவும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close