/indian-express-tamil/media/media_files/2025/09/19/adani-2-2025-09-19-07-21-13.jpg)
அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி. Photograph: (File Photo)
விளக்கம் கேட்டு கொடுக்கப்பட்ட நோட்டீஸில் இருந்த குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று செபி தெளிவாகக் கூறியுள்ளது. மோசடி அல்லது நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் தொடர்பான செபி சட்ட மீறல் எதுவும் இல்லை என்றும் அது உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமம் மற்றும் அதன் முக்கிய நிறுவனங்களான அதானி துறைமுகங்கள் & எஸ்.இ.இசட்., அதானி பவர் மற்றும் அடிகார்ப் எண்டர்பிரைசஸ் ஆகியவற்றின் மீது சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளிலும் கௌதம் அதானி, ராஜேஷ் அதானி ஆகியோருக்கு ‘குற்றமற்றவர்கள் சான்று’ கொடுத்துள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகு, உள் வர்த்தகம், சந்தையைக் கையாளுதல் மற்றும் பொதுப் பங்குதாரர் விதிகளை மீறியது போன்ற குற்றச்சாட்டுகள் சரிந்துவிட்டன என்று செபி தெரிவித்துள்ளது.
விளக்கம் கேட்டு கொடுக்கப்பட்ட நோட்டீஸில் இருந்த குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று செபி தெளிவாகக் கூறியுள்ளது. மேலும், மோசடி அல்லது நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் தொடர்பான செபி சட்ட மீறல் எதுவும் இல்லை என்றும் அது உறுதிப்படுத்தியுள்ளது.
இரண்டு தனித்தனி உத்தரவுகளில், இந்த ஒப்பந்தங்கள் உண்மையான வணிக ஒப்பந்தங்கள் என்றும், விசாரணைக் காலத்தில் இருந்த சட்டக் கட்டமைப்பின்படி அவை மோசடியானவை அல்ல அல்லது தொடர்புடைய தரப்பு பரிவர்த்தனை (ஆர்.பி.டி) விதிமுறைகளை மீறவில்லை என்றும் செபி தெரிவித்துள்ளது.
ஜனவரி 24, 2023-ல், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமம், பங்கு கையாளுதல், கணக்கு முறைகேடுகள், மற்றும் கடல் கடந்த போலி நிறுவனங்களைப் பயன்படுத்திப் பங்கு விலைகளைச் செயற்கையாக உயர்த்துதல் போன்றவற்றைச் செய்து “வரலாற்றின் மிகப்பெரிய கார்ப்பரேட் மோசடியில்” ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியது. மேலும், பொதுப் பங்குதாரர் விதிமுறைகளை மீறியதாகவும், குழுமத்தின் அதிக கடன் அளவு மற்றும் தொடர்புடைய தரப்பு பரிவர்த்தனைகள் குறித்தும் கவலைகளை எழுப்பியது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு அதானி குழுமப் பங்குகளின் விலை கடுமையாகச் சரிந்தது. குழுமத்தின் சந்தை மூலதனம் சுமார் 150 பில்லியன் அமெரிக்க டாலர் சரிந்தது, மேலும் அதன் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 70 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஷார்ட்-செல்லிங் நிறுவனத்தின் நிறுவனர் நேட் ஆண்டர்சன், அந்த நிறுவனத்தை “கலைத்துவிட்டதாக” அறிவித்தார்.
“இந்த விஷயத்தை முழுமையாகக் கருத்தில் கொண்ட பிறகு, விளக்கம் கேட்டு அளிக்கப்பட நோட்டீஸில் (SCN) குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகள் (அதானி குழும நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் மீது) நிரூபிக்கப்படவில்லை என்பதை நான் கண்டறிகிறேன். எனவே, எந்தவொரு பொறுப்பையும் இந்த நிறுவனங்கள் மீது சுமத்தும் கேள்விக்கே இடமில்லை, மேலும் அபராதத் தொகையைத் தீர்மானிக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்று செபியின் முழுநேர உறுப்பினர் கமலேஷ் வர்ஷ்னி உத்தரவில் கூறினார்.
“நான் இதன்மூலம் இந்த நடவடிக்கைகளை எந்தவித உத்தரவுகளும் இல்லாமல் முடிக்கிறேன்” என்று அவர் உத்தரவில் எழுதினார்.
செபி உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட (தொடர்புடைய தரப்பு) பரிவர்த்தனைகள் மோசடி, கையாளுதல் அல்லது நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளாகக் கருதப்பட முடியாது. நிதி முறைகேடுகள் அல்லது பணம் திசை திருப்புதல் குறித்த எந்தக் குற்றச்சாட்டும் இல்லை; விசாரணைகள் தொடங்குவதற்கு முன்பே அனைத்து தொகைகளும் வட்டியுடன் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டன. மேலும், கேள்விக்குரிய பரிவர்த்தனைகள் தொடர்புடைய தரப்பு பரிவர்த்தனைகளாக வகைப்படுத்தப்படவில்லை.
இந்த பரிவர்த்தனைகள் தொடர்புடைய தரப்பு பரிவர்த்தனைகளாக வகைப்படுத்தப்படாததைத்தவிர, மோசடி நடந்ததற்கான வேறு எந்த ஆதாரத்தையும் விளக்கம் அளிக்கப்பட்ட நோட்டீஸ் குறிப்பிடவில்லை. செபி (LODR) விதிமுறைகளை மீறாததால், கேள்விக்குரிய பரிவர்த்தனைகளை மோசடி அல்லது கையாளுதலாகக் கருதுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று உத்தரவு கூறியுள்ளது.
ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில், பல்வேறு அதானி குழும நிறுவனங்களிலிருந்து அதானி பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்கான ஒரு வழியாக அடிகார்ப் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியது.
“அடிகார்ப் எண்டர்பிரைசஸின் சாதாரண நிதி நிலவரங்கள் இருந்தபோதிலும், நான்கு அதானி குழும நிறுவனங்கள் 2020 இல் அந்த நிறுவனத்திற்கு மொத்தமாக ரூ.620 கோடி (87.4 மில்லியன் அமெரிக்க டாலர்) கடன் கொடுத்தன. இதில் சில நிறுவனங்கள் பொதுவில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், இந்த பரிவர்த்தனைகள் குறித்து அதானி குழுமத்தின் நிதி அறிக்கைகளில் எந்த வெளிப்பாடும் நாங்கள் காணவில்லை,” என்று ஹிண்டன்பர்க் அறிக்கை கூறியது. அதன் நிகர லாபத்தைக் கருத்தில் கொண்டால், அடிகார்ப் எண்டர்பிரைசஸ் இந்த கடன்களை வட்டி இல்லாமல் திருப்பிச் செலுத்த சுமார் 900 ஆண்டுகள் ஆகும் என்றும் ஹிண்டன்பர்க் அறிக்கை கூறியிருந்தது.
அதானி நிறுவனங்கள் மைல்ஸ்டோன் டிரேடிங் (எம்.டி.பி.எல்) மற்றும் ரெஹ்வர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆகியவற்றை நிதி பரிமாற்றங்களுக்கான இடைத்தரகர்களாகப் பயன்படுத்தி, அதன் மூலம் தொடர்புடைய தரப்பு கடன்களாக வெளிப்படுத்துவதைத் தவிர்த்ததாக ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியது. மைல்ஸ்டோன் மற்றும் ரெஹ்வர் ஆகிய இரண்டும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் ஜனவரி 2023 அறிக்கையில் பெயரிடப்பட்ட இரண்டு தனியார் நிறுவனங்கள். அதானி குழும நிறுவனங்கள் எம்.டி.பி.எல் மற்றும் ரெஹ்வர் வழியாக அதானி துறைமுகங்கள் & எஸ்.இ.இசட், அதானி பவர் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் ஆகியவற்றுக்கு பணத்தை அனுப்பியுள்ளன, இதன் மூலம் தொடர்புடைய தரப்பு பரிவர்த்தனை விதிகளின் கீழ் வெளிப்படுத்துதல் தேவைகளைத் தவிர்த்துள்ளன என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது.
செபியின் விளக்க நோட்டீஸ், இயக்குநர்களின் கடமைகள் மற்றும் பட்டியலிடுதல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்துதல் தேவைகள் (LODR) உட்பட பல செபி விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டியது. இருப்பினும், மைல்ஸ்டோன் மற்றும் ரெஹ்வர் வழியாக நிதி சுழற்சி செய்யப்பட்டாலும், அனைத்து கடன்களும் உண்மையானவை, வட்டிக்குரியவை மற்றும் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டன என்று செபி குறிப்பிட்டது. அந்த நேரத்தில், செபியின் எல்.ஓ.டி.ஆர். விதிகளின் கீழ் தொடர்புடைய தரப்பு பரிவர்த்தனைகளின் வரையறை, இதுபோன்ற மறைமுக பரிவர்த்தனைகளை உள்ளடக்கவில்லை. 2021 இல் விரிவாக்கப்பட்ட திருத்தங்கள், ஏப்ரல் 2023 முதல் அமலுக்கு வந்தன, அவை எதிர்காலத்திற்கு மட்டுமே பொருந்தும், பின்னோக்கிய காலத்திற்கு அல்ல.
கௌதம் அதானி, ராஜேஷ் அதானி மற்றும் அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷ் சிங் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை, ஏனெனில் வேண்டுமென்றே மறைத்தல் அல்லது மோசடி செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இடைத்தரகு நிறுவனங்கள் குறித்து, மைல்ஸ்டோன் மற்றும் ரெஹ்வர் இடைத்தரகர்களாக செயல்பட்டிருந்தாலும், 2018-23 நிதியாண்டில் இருந்த விதிகளின் கீழ் அவற்றின் பயன்பாடு சட்டவிரோதமானது அல்ல என்று செபி கண்டறிந்தது.
பரிவர்த்தனைகள் சில நிர்வாக கவலைகளை எழுப்பினாலும், அந்த நேரத்தில் நடைமுறையில் இருந்த ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் எந்த சட்ட மீறலும் இல்லை என்று குறிப்பிட்டு, செபி வழக்கை மூடியது.
செபியின் குற்றமற்றவர் சான்று குறித்து கௌதம் அதானி
அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி, “ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” என்று அதானி குழுமம் தொடர்ந்து கூறிவந்ததை, செபி தனது முழுமையான விசாரணைக்குப் பிறகு உறுதிப்படுத்தியுள்ளது என்று கூறினார். “வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை” எப்போதும் அதானி குழுமத்தை வரையறுக்கின்றன என்று அவர் ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்தார்.
“இந்த மோசடியான மற்றும் உள்நோக்கத்துடன் கூடிய அறிக்கையால் பணம் இழந்த முதலீட்டாளர்களின் வலியை நாங்கள் ஆழமாக உணர்கிறோம். தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் இந்த தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று அதானி கூறினார். “இந்தியாவின் நிறுவனங்கள், இந்தியாவின் மக்கள் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்ப எங்களுடைய அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது” என்றும் அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us