கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து ஒரு ஸ்டார்ட் நிறுவனத்தை தொடங்கி அதன் மூலமாக, ஓகே பாஸ் (OK BOZ) என்னும் செயலியை உருவாக்கியுள்ளனர்.
உணவு விநியோகம், போக்குவரத்து, அத்தியாவசிய வீட்டு தேவைகள் அனைத்தையும் இந்த ஒரே செயலியை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அறிமுக விழா கோவை மாவட்டம், ராமநாதபுரம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் செயலியின் தலைமை செயல் இயக்குநர் செந்தில், வர்த்தக மேம்பாட்டு மேலாளர் சிவசங்கர், விற்பனை அதிகாரி பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய தலைமை செயல் இயக்குநர் செந்தில், "பல்வேறு சேவைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள ஓகேபாஸ் (okboz) செயலியை பதவிறக்கம் செய்து கொண்டால், பிப்ரவரி 1 முதல் 28 வரை சிறப்பு சலுகையாக ஒரு ரூபாய்க்கு டாக்சியில் பயணம் செய்ய முடியும். இதன் முதல் கட்டமாக கால் டாக்ஸி சேவையை செயல்படுத்த உள்ளோம்.
பிப்ரவரி 1 முதல் 28 வரை இதில் புக்கிங் செய்து பயன்படுத்துவோருக்கு முதல 2.5 கி.மீ.,க்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணம். அடுத்து வரும் கிலோ மீட்டருக்கு வழக்கமான கட்டணம் இருக்கும். இவை மட்டுமின்றி மேலும் 50 வகையான சேவைகள் இந்த செயலியில் உள்ளடக்கப்படும்.
நடப்பு ஆண்டுக்குள் இதன் பயனாளர்களை ஒரு லட்சம் அளவிற்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களிலும் விரைவாக இதன் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
செய்தி - பி.ரஹ்மான்