சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.8 உயர்ந்து, ரூ.1,945க்கு விற்பனை செய்யப்படுகிறது
சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயித்து வருகின்றன.
ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதையடுத்து, சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை சற்று அதிகரித்து உள்ளது.
அதன்படி சென்னையில் இன்று (ஜூலை 1) 19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 8 ரூபாய் அதிகரித்து, ரூ.1,945க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மே மாதம் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.171 குறைக்கப்பட்டது. பிறகு ஜூன் மாதம் ரூ.84.50 குறைக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் ரூ.8 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டரின் விலை எந்த மாற்றமுமின்றி, தொடர்ந்து ரூ.1,118.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil