கொரோனா பாதிப்பு எதிரொலி - ரெப்போ வட்டி விகிதம் அதிரடி குறைப்பு

RBI Coronavirus relief: இந்தியாவின் வங்கிகளின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளது. பொதுமக்களின் வங்கி டெபாசிட்கள் பாதுகாப்பாக உள்ளன. மக்கள் அச்சப்பட வேண்டாம்

RBI Governor press conference: கொரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கம், இந்திய பொருளாதாரத்தில் பெரிதும் எதிரொலிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதத்தை, 75 அடிப்படை புள்ளிகள் அளவிற்கு குறைத்து 4.4 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதன் பரவலை தடுக்கும் பொருட்டு ஏப்ரல் 14ம் தேதி வரை நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவைகள் அடைக்கப்பட்டுள்ளதால், மக்களின் பொருளாதார வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் பாதிப்பு, நாட்டின் பொருளாதாரத்திலும் எதிரொலித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்களுக்கு உதவும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவிற்கு தீர்வு காணும் பொருட்டு, ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகள் கடந்த 24, 26 மற்றும் 27ம் தேதிகளில் கூடி ஆலோசனை நடத்தினர். இதில் பெரும்பாலான அதிகாரிகளின் ஒப்புதலுடன், வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைத்து 4.4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 90 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 4 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளின் பண கையிருப்பு விகிதம் 100 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் நாளை (28ம் தேதி) முதல் அடுத்த ஓராண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில், பத்திரிகையாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது, கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவின் காரணமாகவே, இந்த வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு குறித்து முன்கூட்டியே ரிசர்வ் வங்கி அறிந்திருந்ததாகவும், பொருளாதார சரிவு மீட்பு நடவடிக்கைகளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தாங்கள் துவக்கி மேற்கொண்டு இருந்தோம். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு உள்ளோம்.

நாட்டின் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்கும் பொருட்டு 4 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

சந்தையில் பணப்புழக்கத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்

பண பரிமாற்றத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல்

வாங்கிய கடனை திரும்ப செலுத்தும்போது ஏற்படும் அழுத்தங்கள், இடர்பாடுகளை களைதல்

சந்தைகளின் செயல்பாடுகளை மேம்படுத்துதல்

சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக, நீண்ட கால ரெப்போ வட்டி நடவடிக்கைகளை இலக்காக கொண்டு செயல்பட்டோம்.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடிகள் அளவிற்கான ஏலங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். வங்கி கையிருப்பு விகித அளவை 100 அடிப்படை புள்ளிகள் அளவிற்கு குறைத்து 3 சதவீதமாக நிர்ணயித்துள்ளோம். இந்த புதிய நடைமுறை, நாளை (28ம் தேதி) முதல் அடுத்த ஓராண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். வங்கிகளின் தினசரி வங்கி கையிருப்பு விகிதம் 90 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ1.37 லட்சம் கோடி பணப்புழக்கத்திற்காக அனுமதிக்கப்படும்.

வங்கிகளின் சட்டரீதியான பணப்புழக்க விகிதத்தின் விளிம்புநிலை வசதி 2 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள், தனியார் வங்கிகள் உள்ளிட்டவைகளில் கடன் வாங்கியவர்கள், அடுத்த 3 மாதங்களுக்கு கடனை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது மார்ச் 1, 2020 முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவின் வங்கிகளின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளது. பொதுமக்களின் வங்கி டெபாசிட்கள் பாதுகாப்பாக உள்ளன. மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close