இந்தியா – சீனா இடையே வெடித்துள்ள எல்லை விவகாரம், அதனை தொடர்ந்து மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 59 சீன செயலிகளுக்கான தடை விவகாரம், இந்தியாவில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டபோது ஏற்பட்ட பாதிப்பைப்போல, தற்போது அலைவரிசை ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தி வால்ட் டிஸ்னி ( ஆசிய பசிபிக்) மற்றும் ஸ்டார் அண்ட் டிஸ்னி இந்தியா தலைவருமான உதயசங்கர் தெரிவித்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் E-Adda நிகழ்ச்சிக்காக நடந்த கலந்துரையாடலில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் கோயங்கா, தேசிய விளையாட்டு பிரிவின் ஆசிரியர் சந்தீப் திவேதி உள்ளிட்டோருடன் உதயசங்கர் கலந்துரையாடினார்.
அந்த கலந்துரையாடலில் உதய சங்கர் கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ் பாதிப்பால்,சகலவிதமான தொழில்களும் முடங்கியுள்ள நிலையில், இந்த சீன விவகாரம் மேலும் பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று விவகாரம் அனைத்து துறைகளிலும் இதுவரை இல்லாத அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சீன எல்லை மோதல் விவகாரம் பெரும் சங்கடத்தை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தை நாம் மாற்றுவழியில் தீர்க்க முயல வேண்டும்.
எங்களது நிறுவனம், ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்புவதற்கான உரிமையை பெற்றுள்ளது. ஆனால், தற்போது இந்தியாவில் சீன நிறுவனங்களின் பயன்பாடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிகழ்வால், எங்களுக்கு பெரிய பாதிப்பு உருவாகியுள்ளது. இந்த தடையால்,தற்போது தாங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏற்பட்டதொரு பாதிப்பை போன்று உணர்கிறோம்.
2017ம் ஆண்டு, ஸ்டார் இந்தியா நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை, ரூ 16,347.50 கோடிக்கு வாங்கியது. பிசிசிஐ, கடந்த மாதம், சீன நிறுவனங்கள் உடனான உறவு குறித்து ஆய்வு நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் என்பது இந்தியாவில் விளையாட்டு மட்டுமின்றி அது ஒரு சக்தி. இந்த சக்தியின் மூலம், நாட்டில் பல்வேறு தரப்பினர் வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்த தடையால், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், விரைவில் இந்த விவகாரத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என்று உதய சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கருத்து தெரிவிக்கக்கூடாது. ஏனெனில், கிரிக்கெட் பத்திரிகையாளர்களுக்கும், கிரிக்கெட் வர்ணனையாளர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. பத்திரிகையாளர்களுக்கு தான் நினைத்தவற்றை கூற இங்கு உரிமை உண்டு. ஆனால், வர்ணனையாளர்களுக்கு அப்படி இல்லை. அவர்கள் விளையாட்டை தங்களது வர்ணனையின் மூலம் மேலும் விறுவிறுப்பாக்க வேண்டுமே தவிர, கிரிக்கெட் சார்ந்த விசயங்களை பேசி புதுவித பிரச்சனைகளை உருவாக்கக்கூடாது என்று வர்ணனையாளர் என்ற முறையில் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டில் ஐபிஎல் தொடரை நடத்துவதன் மூலமே, மக்களின் கிரிக்கெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். ஆனால், கிரிக்கெட் வாரியம், ஐபிஎல் தொடரை நடத்தும் முடிவை, காலவரையின்றி ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனம் ஆலோசனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கின் காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் சாதகமான சூழல் திரும்பினால், ஐபிஎல் தொடர் நடத்தப்படும். அந்த நல்ல நாளுக்காக நானும் காத்திருக்கிறேன் என்று உதயசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil