ஏதோ ஒரு வகையில் தினமும் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கொண்டே இருக்கிறோம். இது நம்முடைய பண பரிமாற்ற முறையை மிகவும் எளிமையாக்குகின்றது. மேலும் நமது பணத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.
ஒரு காலத்தில் கிரெடிட் கார்டு வைத்திருப்பது அந்தஸ்தின் அடையாளம். இந்த நிலை மாறி, தற்போது கிரெடிட் கார்டை வங்கிகளே கூவிக் கூவி கடன் அட்டையை வழங்கத் தயாராக இருக்கின்றன.
ஆனால் மக்களில் சிலரோ, கிரெடிட் கார்ட் என்பது வீண் செலவு, நம்மை கடனாளி ஆக்கும் முறை எனறு புலம்புவது உண்டு.
இருந்தும் நாம் ஒன்றை தெரிந்துக் கொள்ள வேண்டும், வங்கியில் அவசரத்திற்கு போய் லோன் வேண்டும் என்று கேட்டால் அவர்கள் உங்களிடம் கேட்கும் முதல் கேள்வி கிரெடிட் கார்டு பயன்ப்படுத்துகிறீர்களா? என்பது தான்.
காரணம், கிரெடிட் கார்டு ஸ்கோரை சரிபார்த்து தான் உங்களுக்கு கடன் வழங்கலாமா? என வங்கி நிர்வாகம் முடிவு செய்யும். எனவே இந்த கிரெடிட் ஸ்கோர் சம்பாதிக்க, கிரெடிட் கார்டு பெற்றே ஆக வேண்டும்.
கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை மாத தவணையாக திருப்பி செலுத்தும் வசதியும் உள்ளது. ஆனால் இதற்கான வட்டி அதிகம். இது தனிநபர் கடன் செலுத்துவதுபோல செலுத்த வேண்டும்.
கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளவும் முடியும். இதற்கு பரிமாற்றக் கட்டணம் மற்றும் வட்டியும் அதிகம். ரூ.1,000 பணம் எடுத்தால் அதற்கு ரூ. 250 ரூபாய் வரை பரிமாற்றக் கட்ட ணம் பெறப்படும். மேலும் பணம் எடுத்த நாளிலிருந்து திரும்ப கட்டும் தேதிவரை வட்டி கணக்கிடப்படும். வட்டி விகிதம் 35 % முதல் 40% என்கிற அளவில் இருக்கும்.
கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர வேண்டும். வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்வதா அல்லது கையில் வைத்துக் கொண்டு செலவு செய்வதா என்பதை முடிவு செய்து கொண்டால் கிரெடிட் கார்டு நல்லதா கெட்டதா என்பது விளங்கிவிடும்.