ஒரு காலத்தில் ஆடம்பரத்தின் கிளையாக பார்க்கப்பட்ட கிரெடிட் கார்டுகள், இன்று அத்தியாவசிய தேவையாகிவிட்டன. மாத சம்பளம் பெறும் ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தினரின் பர்ஸிலும் இன்று கிரெடிட் கார்டை பார்க்கலாம். என்னதான் நாம் கவனமாக பார்த்து பார்த்து தேய்த்தாலும், பில் வரும் போது 300, 800 ரூபாய் என கூடுதல் கட்டணம் பிடிக்கப்பட்டிருக்கும்.
இது எதற்காக என குழம்புவோர் ஏராளம். கிரெடிட் கார்டுகளில் எதற்கெல்லாம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது?
1. ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தல்
கிரெடிட் கார்டுகள் மூலமாக ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கலாம். பெரும்பாலான கிரெடிட் கார்டு சேவை நிறுவனங்கள், கிரெடிட் லிமிட்டில் 80% வரை ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கின்றன.
அதாவது, உங்களுக்கு 2 லட்ச ரூபாய் கிரெடிட் லிமிட் என வைத்துக் கொள்வோம். நீங்கள் 1,60,000 ரூபாய் வரையில் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கலாம். ஆனால், இது இலவசமாக அல்ல. இதற்கு நீங்கள் ஏ.டி.எம்.களில் எடுக்கும் தொகையில், 2.4% கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த பில், உங்களது கிரெடிட் கார்டு பில்லோடு சேர்க்கப்படும்.
எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டுகளில், 2.4% கட்டணம் அல்லது 300 ரூபாய், இதில் எதில் உச்சமோ அது வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் நிறுவனங்களுக்கு ஏற்றவாறு, நீங்கள் ஏ.டி.எம். வாயிலாக எடுத்துள்ள தொகைக்கு 24% முதல் 46% வரையில் ஆண்டு வட்டி வசூலிக்கப்படுகிறது.
மற்ற கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு, 40 முதல் 50 நாட்களுக்கு வட்டி செலுத்த தேவையிருக்காது. ஆனால், கிரெடிட் கார்டு மூலமாக நீங்கள் ஏ.டி.எம்.களில் பணம் எடுத்த மறுநொடியே வட்டி கணக்கிட்டு வசூலிக்கப்படும். ஆக, கிரெடிட் கார்டு மூலமாக ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதை இறுதி கட்டமாக வைத்துக் கொள்ளுங்கள்.
2. ஆண்டு பராமரிப்பு கட்டணம்
கிரெடிட் கார்டு வாங்கும் போது, அந்த கார்டுக்கு ஆண்டு பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒருசில கார்டுகளுக்கு முதல் வருடம் இலவசமாகவும், 2வது வருடத்திலிருந்து பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில கார்டுகளுக்கு ஆண்டு பராமரிப்பு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. உங்களுடைய கிரெடிட் கார்டு எந்த வகையை சேர்ந்தது என்பதை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
3. வட்டி விகிதம்
கிரெடிட் கார்டு பில்லில் நாம் செலுத்த வேண்டிய முழு கட்டணமும் வரும். கூடவே, குறைந்தபட்சம் செலுத்த வேண்டிய கட்டணம்(minimum payable amount) என ஒரு கொக்கியையும் போடுவார்கள். சிலர் இந்த குறைந்தபட்ச கட்டணத்தை மட்டும் செலுத்திவிட்டு, மீதியை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிடுவர். இங்கு தான் வினையே இருக்கிறது.
மீதி செலுத்த வேண்டிய கட்டணத்திற்கு 2 முதல் 4% வட்டி வசூலிக்கப்படுகிறது. இதற்குள்ளாக அடுத்த பில் வந்துவிடும். ஏற்கனவே வட்டியோடு செலுத்த வேண்டிய பாக்கி, புது பில் கட்டணம் என கடன் சுமை அதிகரிக்கும். பில் செலுத்தும் தேதியை கடந்தால் அதற்கு ஒரு அபராதம் வசூலிக்கப்படும். ஆகவே, குறிப்பிட்ட தேதிக்குள் முழு பில் கட்டணத்தையும் செலுத்த பாருங்கள்.
4. தாமதத்திற்கான அபராதம்
குறிப்பிட்ட தேதிக்குள் கிரெடிட் கார்டு பில் தொகையை செலுத்த முடியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. வட்டிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
5. ஜி.எஸ்.டி.
ஜி.எஸ்.டி. வருவதற்கு முன்னர், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான சேவை சரி 15 சதவிகிதமாக இருந்தது. ஜி.எஸ்.டி. அமலான பிறகு, சேவை வரி 3% அதிகரித்து, 18 சதம் வசூலிக்கப்படுகிறது. இதனால், வட்டி விகிதம், அபராதம் ஆகிவற்றுக்கான வரி அதிகரித்துள்ளது.
மாதக் கடைசியில் பெரும்பாலானோருக்கு கிரெடிட் கார்டுகள் தான் கை கொடுக்கின்றன. அதை பயன்படுத்துவற்கு முன்னதாக, எதற்கெல்லாம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.