Shiba Inu coin Tamil News: சர்வதேச டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தின் எதிர்காலமாக கிரிப்டோகரன்சிகள் உருவெடுத்துள்ளன. இவற்றில் கொடி கட்டி பறந்து வரும் கிரிப்டோகரன்சிகளில் பல வகைகள் உண்டு. அவற்றில் பிட்காயின், எத்திரியம் காயின், பினான்ஸ் காயின், கார்டனோ, டாஜ்காயின் போன்றவை பிரபலமான ஒன்றாக உள்ளது. இந்த வரிசையில் தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது ஷிபா இனு காயின்.
ஒரு பிரபலமான மீம் கொண்டு வடிவைக்கமைக்கப்பட்டுள்ள இந்த ஷிபா இனு (SHIB) தற்போது மற்ற எல்லா கிரிப்டோகரன்சிகளையும் விட அதிவேகமாக முதலீடு செய்யப்பட்டு கிரிப்டோ மார்க்கெட்டில் முக்கிய இடத்தை தக்கவைத்து வருகிறது. இதன் சந்தமதிப்பு கடந்த புதன்கிழமை அன்று டாஜ்காயினை விட பலமடங்கு உயர்ந்து கிரிப்டோ மார்க்கெட்டில் $0.00008456 விலைக்கு மேல் சென்று சாதனை படைத்தது.
மேலும், அதானி எண்டர்பிரைசஸ், டாடா ஸ்டீல் மற்றும் டெக் மஹிந்திரா போன்ற சில முக்கிய இந்திய நிறுவனங்களின் பங்குகளை விஞ்சியிருக்கிறது ஷிபா இனு சந்தை மதிப்பு. இதனால் அனைத்து நேர உயர் சந்தை மூலதனத்தை கொண்டு வருவதற்கு கிரிப்டோ ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்கள் இன்னும் போராடி வருகின்றனர்.
முன்னர் குறிப்பிட்டதை போல சந்தை மதிப்பில் விண்ணை முட்டும் வேகத்தில் வளர்ச்சியடைந்து வரும் இந்த ஷிபா இனு காயின் 38 பில்லியன் டாலர்க்கு அதிகமான சந்தை மூலதனத்துடன், தற்போது 11வது பெரிய கிரிப்டோகரன்சியாக உள்ளது. 32 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்துடன் டாஜ்காயின் 10வது இடத்தை பிடித்துள்ளது.
இதில் சுவாரஸ்யம் என்றவென்றால், யூனிஸ்வாப், லூனா, யுஎஸ்டி காயின், போல்கடோட் மற்றும் எக்ஸ்ஆர்பி போன்ற கிரிப்டோகரன்சிகளுக்கு பிறகு அறிமுகமான ஷிபா இனு சந்தை மதிப்பு அடிப்படையில் அவற்றை முறியடித்து "தி டாக்காயின் கில்லர்" ஆக உருவெடுத்துள்ளது.
ஷிபா இனு காயின் இப்படி அதிவேக வளர்ச்சி பெற டெக் பில்லியனர் எலோன் மஸ்க் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறார். அவர் கடந்த அக்டோபர் 18 அன்று சந்திரனுக்கு செல்லும் ஷிபா இனு காயீனின் புகைப்படத்தை ட்வீட் செய்திருந்தார். இதனையடுத்து ஷிபா இனு காயின் வளர்ச்சியில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக ஊகிக்கப்படுகிறது.
அந்த நேரத்தில், ஷிபா இனு காயின் டோக்கன் மதிப்பு 0.000026 டாலராக இருந்தது (ரூ. 0.0020). அவரது ட்வீட்க்கு பின்னர் காயீனின் மதிப்பு ஏறக்குறைய 50 சதவீதத்திற்கு உயர்ந்து $0.000044 (ரூ. 0.0033) என்ற உச்சத்தை எட்டியது.
மற்றொரு முக்கிய காரணம், பிரபல பங்கு வர்த்தக பயன்பாடான (செயலி) ராபின்ஹூட்டில் விரைவில் ஷிபா இனு காயின் பட்டியலிடப்படும் என்று கிரிப்டோ உலகில் வதந்திகள் பரவி வருகின்றன. ராபின்ஹூட்டிடம் ஷிபா இனு காயீனை அதன் செயலியில் பட்டியலிடுமாறு சேஞ் அமைப்பு (Change.org ) ஒரு மனுவையும் கோரியுள்ளது. இது கிட்டத்தட்ட 3 லட்சம் கையெழுத்துகளைப் பெற்றுள்ளது.
தொழில்நுட்ப எவெஞ்சலிஸ்ட்டும் மற்றும் ஒரு கிரிப்டோ நிபுணருமான ஷரத் சந்திரா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "ஷிபா இனு காயின் மதிப்பு உயர சில்லறை வணிக சமூகத்தின் உணர்வு மற்றும் எலோன் மஸ்க்-ன் டாஜ்காயின் மீதான விரோதம் காரணமாக இருக்கலாம். இந்த காயீனின் ஒப்பிடமுடியாத விலை உயர்வுக்குப் பின்னால் நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை." என்று கூறியுள்ளார்.
சந்திரா, ஷிபா இனு காயினில் முதலீடு செய்வதில் புதிய முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்குகையில், "விலை ஏற்றம் தாங்க முடியாதது மற்றும் உடனடி வீழ்ச்சியை நிராகரிக்க முடியாது. லாபத்தை பதிவு செய்து (பெற்றுக்கொண்டு) வெளியேறுவதற்கான நேரம் இது." என்றுள்ளார்.
ஷிபா இனு மற்றும் டாஜ்காயீனை ஒப்பிட்டு பேசியுள்ள ஹிதேஷ் மால்வியா (ப்ளாக் ஜெயின் வெளியீடு மற்றும் itsblockchain.com இன் நிறுவனர்), "டாஜ்காயின் உடன் ஒப்பிடும்போது ஷிபாவின் பரவலாக்கப்பட்ட நிதி உலகில் நுழைந்தது. நீண்ட காலத்திற்கு நாணயத்தை சிறந்ததாக உருவாக்கியுள்ளது. இருப்பினும், ஷிபா இனுவில் ஒரு பெரிய திருத்தத்தை நாம் காணலாம். ஏனெனில் அது இந்த நேரத்தில் மிகைப்படுத்தப்பட்டுள்ளது." என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்திய கிரிப்டோ-கரன்சி பரிமாற்ற தளமான வாசீர்எக்ஸ் (WazirX), ஷிபா இனு இந்த வாரம் இந்திய ரூபாய் சந்தையில் அதிக வர்த்தகம் செய்யப்பட்ட டோக்கனாக பிட்காயின் நிலையை முந்தியது என்று குறிப்பிட்டுள்ளது. “கடந்த 24 மணி நேரத்தில், வாசீர்எக்ஸ்-ல் 320 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஷிபா இனு காயின் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இது வாசீர்எக்ஸ்-ல் 24 மணி நேர வர்த்தக அளவில் முதல் முறையாக ஷிபா இனு அதிகமாக (560 மில்லியன்) வர்த்தக பதிவை கொண்டுவந்துள்ளது" என்று வாசீர்எக்ஸ் (WazirX) நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நிச்சல் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.