வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. ஏற்கனவே, கடைசி தேதி மேலும் நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தெளிவாக கூறிவிட்டது.
இருப்பினும், ஏதெனும் காரணங்களால் வருமான வரி தாக்கல் செய்ய மறந்தவர்கள், இனிமேல் வருமான வரித் தாக்கல் செய்ய முடியுமா? என குழப்பத்தில் இருப்பார்கள். அவர்களுக்கான செய்திதான் இது.
தாரளமாக கடைசி தேதிக்கு பிறகும் வருமான வரித் தாக்கல் செய்ய முடியும். ஆனால், அதற்கு அபராதம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.
கடைசி தேதிக்கு பின் வருமான வரித் தாக்கல் செய்தால் தாமதக் கட்டணமாக 5000 ரூபாய் வசூலிக்கப்படும். 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் மொத்த வருமானம் கொண்டவர்கள் 1000 ரூபாய் மட்டும் அபராதம் செலுத்தினால் போதும்.
வருமான வரி விதிப்பு வரம்பிற்கு கீழ் உங்களது மொத்த வருமானம் இருந்தால் நீங்கள் எந்த அபராதமும் செலுத்த தேவையில்லை.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் செய்தியாளர் சந்திப்பில், வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ், ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க எந்த வாய்ப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
அப்போது பேசிய அவர், " வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதியை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை. சுமுகமாக முறையில் வருமான வரி தாக்கல் செய்யப்படுகிறது.பிற்பகல் 3 மணி நிலவரப்படி மொத்தம் 5.62 கோடி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று 20 லட்சத்துக்கும் அதிகமானோர் ரிட்டன்கள் தாக்கல் செய்தனர். இந்த ஆண்டு கூடுதலாக 60 லட்சம் ரிட்டர்ன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil