Post Office Savings Scheme | போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் பாரம்பரிய முதலீட்டு கருவிகளாக உள்ளன. தற்போது போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள், கடந்த காலங்களைப் போல் இல்லாமல் முதலீடுகளுக்கு வங்கிகளுக்கு ஈடான வட்டி விகிதத்தை தருகின்றன.
சில திட்டங்கள் வங்கிகளுக்கே சவால்விடும் வகையில் உள்ளன. உதாரணமாக, வங்கி சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்கள், போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டத்தை விட குறைவாகும்.
தற்போது போஸ்ட் ஆபிஸின் அதிக வட்டி வழங்கும் சிறந்த 5 திட்டங்களை பார்க்கலாம்.
1) பி.பி.எஃப்
பி.பி.எஃப் (PPF) ஒரு ஓய்வூதிய கார்பஸை உருவாக்க மிகவும் பொருத்தமானது. இது 15 வருட லாக்-இன் காலத்துடன் 7.1 சதவீத வட்டியை வழங்குகிறது. குறைந்தபட்ச பங்களிப்பு ரூ. 500 மற்றும் ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம். இதில், ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
2) கிஷான் விகாஸ் பத்ரா
18 வயதுக்கு மேற்பட்ட எவரும் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இந்தத் திட்டத்தைத் தொடங்கலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ. 1,000, மேல் வரம்பு இல்லை. இது ஒரு குறுகிய கால முதலீட்டு திட்டமாகும், இது 30 மாத முதிர்வு மற்றும் 7.5 சதவீத வட்டியை வழங்குகிறது.
3) தேசிய சேமிப்பு சான்றிதழ்
தேசிய சேமிப்பு சான்றிதழ் எனப்படும் (NSC) 5 ஆண்டுகள் முதிர்வு காலத்தைக் கொண்டுள்ளது. 7.7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இது ஓய்வு பெறும் அல்லது ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு மிகவும் பொருத்தமானது. குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ 1,000, அதிகபட்ச வரம்பு இல்லை.
4) சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள் சேமிப்ப திட்டம்)
பெண் குழந்தைகளுக்கான பிரத்யேகமான இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் ஆகும். முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும்.
இந்தத் திட்டத்தில் ரூ.250 முதலீட்டில் கணக்கு தொடங்கலாம். இந்தத் திட்டம் 8.2 வட்டியை வழங்குகிறது. SSY கணக்கு, வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரையிலான விலக்குகளுக்குத் தகுதியுடையது,
5) மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்
SCSS என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டமாகும், இதில் வயதானவர்கள் ரூ. 30 லட்சம் வரை பங்களிக்கலாம்.
இதில், குறைந்தபட்ச முதலீடு 1,000 ரூபாய் ஆகும். ஐந்து வருடங்களில் முதிர்ச்சியடைந்தாலும், மூன்று வருட இடைவெளியில் ஒருவர் கணக்கை காலவரையின்றி நீட்டிக்க முடியும். இது ஆண்டுதோறும் 8.2 சதவீதம் வட்டியை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“