மாதம் ரூ.500 முதலீட்டில் லட்சக்கணக்கில் வருமானம் கொடுக்கும் அஞ்சலகத்தின் மூன்று முத்தான திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
இந்தத் திட்டங்களில் வரிவிலக்கு சலுகையும் உண்டு. இது கூடுதல் சிறப்பாகும். இந்தத் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.500 முதலீடு செய்தால் 15 ஆண்டுகால முதிர்வின்போது லட்சக்கணக்கில் வருவாய் கிடைக்கும்.
இதில் முதலாவது இடத்தில் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பி.பி.எஃப் மற்றும் ஆர்.டி திட்டங்கள் வருகின்றன.
செல்வ மகள் சேமிப்பு திட்டம்
2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற செல்வ மகள் சேமிப்ப திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
குடும்பத்தில் 14 வயதுக்கு உட்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் பெயரில் திட்டத்தில் முதலீடு செய்யலாம். ரூ.250-ஐ செலுத்தி கணக்கை தொடங்க வேண்டும். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். இத்திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை வரி விலக்கு கோரலாம். இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.500 முதலீடு செய்தால் ரூ.2,77,103 கிடைக்கும்.
- மாத முதலீடு - ரூ.500
- திட்டத்தின் காலம் - 15 ஆண்டுகள்
- வரி விலக்கு - ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம்
- முதிர்வு தொகை - ரூ.2,77,103
போஸ்ட் ஆபிஸ் ஆர்.டி திட்டம்
போஸ்ட் ஆபிஸ் ஆர்.டி திட்டத்தில், ரூ.100 கூட முதலீடு செய்யலாம். ஒருமுறை முதலீடு செய்ய ஆரம்பித்தால் 5 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். தற்போது இத்திட்டத்தின் வட்டி விகிதம் 6.7% ஆக உள்ளது.
மேலும், இத்திட்டத்தில் மாதந்தோறும் ரூ.500 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் முதலீடு செய்வீர்கள். வட்டியாக மட்டும் ரூ.5 ஆயிரத்து 681 கிடைக்கும். ஆக உங்கள் முதலீடுக்கு ரூ.35 ஆயிரத்து 681 கிடைக்கும்.
பி.பி.எஃப்
எந்தவொரு இந்தியக் குடிமகனும் பி.பி.எஃப் கணக்கை ரூ.500 முதலீட்டில் தொடங்கலாம். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். இத்திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
மேலும், 15 ஆண்டுகால முதிர்வுக்கு பின்னர் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யலாம். இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.500 வீதம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் முதலீடு செய்து இருப்பீர்கள்.
தற்போது பி.பி.எஃப் திட்டத்தில் 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. திட்டத்தில் ரூ.500 முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் ரூ.1,62,728 கிடைக்கும். இதையே கூடுதலாக 5 ஆண்டுகள் நீட்டித்தால் ரூ.2,66,332 கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“