வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை திருத்தம்படி, 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் 999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மாற்றம் இன்று(மே.7) முதல் அமலுக்கு வருகிறது.
இம்மாதம் முன்னதாக, 19 கிலோ வணிக பயன்பாட்டிற்காக சிலிண்டரின் விலை ரூ102 அதிகரிக்கப்பட்டு, ரூ2,355.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொருளாதார நிபுணர்கள் கூற்றுப்படி, இது ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீட்டு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் 7.7 சதவீதமாக உயரும் நேரத்தில் வந்துள்ளது.
புவிசார் அரசியல் பதட்டங்கள், வெப்ப அலை காரணமாக கோதுமை போன்ற உணவு பொருள்களின் விலைகளில் தாக்கம், எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஒட்டுமொத்த போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு ஆகியவை பணவீக்க விகிதத்தின் எழுச்சியை அதிகரித்துள்ளன. இது மார்ச் மாதத்தில் கடந்த 17 மாதங்கள் இல்லாத அளவு அதிகபட்சமாக 6.95 சதவீதம் உயர்ந்துள்ளது.
முழு நிதியாண்டிலும், பணவீக்க விகிதம் 6 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது ரிசர்வ் வங்கியின் நடுத்தர கால பணவீக்க இலக்கின் உயர் பேண்ட் காட்டிலும் அதிகமாகும்.
இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தில் உள்நாட்டு உணவு விலைகள் பற்றிய கவலைகளுக்கு மத்தியில், ரிசர்வ் வங்கி புதன்கிழமையன்று ரெப்போ விகிதம் 40 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
சமையல் எரிவாயு விலை ஆயிரத்தைத் நெருங்கியுள்ளது. இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil