நான்கு மாதங்களுக்கு முன்பு இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்வது தொடங்கிய பின்னர், 14 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்த தளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர் என்று தொழிலாளர் அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. “இ-ஷ்ரம் தளத்தின் பதிவு வெறும் 4 மாதங்களில் 14 கோடியைத் தாண்டியுள்ளது… அதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் பாராட்டுக்கள்” என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்தர் யாதவ் ட்வீட் செய்துள்ளார்.
அமைச்சர் பூபேந்தர் யாதவ் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, 14 கோடியே 02 லட்சத்து 92 ஆயிரத்து 825 முறைசாரா துறை ஊழியர்கள் இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
இ-ஷ்ரமில் மிக அதிகமான தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்ட முதல் ஐந்து மாநிலங்கள் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா மற்றும் ஜார்கண்ட் என்று இந்த போர்ட்டலின் சமீபத்திய தரவுகள் காட்டுகிறது.
இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்யப்பட்டவர்களில், பாலின அடிப்படையில் 52.56 சதவீதம் பேர் பெண் தொழிலாளர்கள் மற்றும் 47.44 சதவீதம் பேர் ஆண்கள் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த தரவுகளின்படி, பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களில் சுமார் 42.64 சதவீதம் பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), அதைத் தொடர்ந்து 26.45 சதவீதம் பொதுப் பிரிவினர், 22.54 சதவீதம் பேர் பட்டியல் வகுப்பினர் மற்றும் 8.38 சதவீதம் பேர் பட்டியல் பழங்குடியினர் பதிவு செய்துள்ளனர்.
இ-ஷ்ரம் தளத்தில் 94 சதவீதத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் வருமானம் மாதத்திற்கு ரூ.10,000 அல்லது அதற்கும் குறைவாக உள்ளது. அதே சமயம் 4 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் மாதத்திற்கு ரூ.10,001 முதல் ரூ.15,000 வரை வருமானம் பெறுகின்றனர்.
பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களில் 51 சதவீதம் பேர் விவசாயத் தொழிலாளர்கள், 11 சதவீதம் பேர் கட்டுமானத் துறை தொழிலாளர்கள், 10 சதவீதம் பேர் வீடு மற்றும் வீட்டுப் பணியாளர்கள் மற்றும் 6.5 சதவீதம் பேர் ஆடைகள் தயாரிப்பு பிரிவில் உள்ளனர்.
இதில் சுமார் 61 சதவீதம் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களின் வயது 18 வயது முதல் 40 வயது வரையிலும், 23 சதவீதம் பேர்களின் வயது 40 வயது முதல் 50 வயது வரையிலும், 12 சதவீதம் பேர்கள் 50 வயதுக்கு மேல் உள்ளனர். மேலும், இதில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களில் சுமார் 4 சதவீதம் பேர் 16 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள்.
ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கப்பட்ட இ-ஷ்ரம் தளம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், வீட்டுப் பணியாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாராத் துறைத் தொழிலாளர்கள் பற்றிய நுண்ணறிவை முதன்முறையாக வழங்குகிறது. இப்போதைக்கு, இந்த தரவுத்தளம் முக்கியமாக EPFO-ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்கள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இரண்டு பதிவுகளும் 12 இலக்க அடையாள எண், யுனிவெர்சல் கணக்கு எண் (UAN) என்ற பொதுவான வடிவத்தைக் கொண்டிருப்பதால், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் முறையான துறையில் ஏதேனும் முன் பதிவு செய்த தொழிலாளர்களைச் சரிபார்க்க டேட்டா தளம் ஆய்வு செய்யப்படும்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அவர்களை நேரடியாகச் சென்று சேரும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இ-ஷ்ரம் தளத்திற்கு சென்று உங்களுடைய பெயர், செய்யும் வேலை, முகவரி, குடும்ப விவரம், வருமானம், உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யுங்கள். அமைப்புசாரா தொழிலாளர்களாக பதிவு செய்வதன் மூலம் மத்திய அரசின் அமைப்புசாரா மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கான திட்டங்களை அணுகுவதற்கு ஏதுவாக இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"