ஈ-வே பில் அமலாக்கம் தள்ளிவைப்பு; ஜிஎஸ்டியில் தொடரும் சிக்கல்

தனி வலைதளம் உருவாக்கப்ப்டடு, அதன்மூலம் தொடர்புள்ள யாரும் வாகனத்தில் செல்லும் சரக்கு குறித்த தகவல்களைச் சொல்லி தாங்களாகவே ஈ-வே பில்லைப் பெற்றுக் கொள்ளலாம்

ஜிஎஸ்டி அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, ஈ-வே பில் எனப்படும் புதிய முறை பிப்ரவரி 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலாக்கப்பட இருந்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இதற்கான பிரத்யேக வலைதளம் இயங்காததால், அது தற்போது தேதி அறிவிக்காமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்த பின், மாநில எல்லைகளில் அமைக்கப்பட்டிருந்த சுங்கச் சாவடிகள் நீக்கப்பட்டுள்ளன. அதனால், வாகனங்களில் செல்லும் சரக்குகள் வரி செலுத்தி பின்தான் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அதனால், வரி ஏய்ப்பு நடப்பதைத் தடுக்க ஈ-வே பில் (E-Way Bill) பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டது. 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக மதிப்பில் சரக்குகளை சுமந்து செல்லும் வாகனங்களில் கட்டாயமாக ஈ-வே பில் (E-Way Bill) இருக்க வேண்டும் என கூறப்பட்டது.

தேசிய அளவில் இதன் அமலாக்கம் பிப்ரவரி 1ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. தனி வலைதளம் ஒன்று இதற்காகவே உருவாக்கப்ப்டடு, அதன்மூலம் தொடர்புள்ள யாரும் வாகனத்தில் செல்லும் சரக்கு குறித்த தகவல்களைச் சொல்லி தாங்களாகவே ஈ-வே பில்லைப் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டிருந்தது. ஆனால், பிப்ரவரி 1 அன்றே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இதற்கான வலைதளம் பாதிக்கப்பட்டது. எனவே, புதிய விதிமுறை தற்போது தேதி குறிப்பிடாமல், தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான மென்பொருள் உருவாக்கும் பணியில் உள்ள தேசிய தகவல் மையம் கேட்டுள்ள 15 நாள் அவகாசம் முடிந்து, முழுமையாக சோதிக்கப்பட்ட பின்தான், மீண்டும் புதிய தேதி அறிவிக்கப்பட்டு ஈ-வே பில் அமல்படுத்தப்படும் என தெரிகிறது.

×Close
×Close